மதுரவாயலில் வசிக்கும் யுடியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் யுடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என கருதிய பெலிக்ஸ், முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேட்டி கொடுப்பவரை விட கேள்வி கேட்பவர்களைத்தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். மேலும், முன் ஜாமீன் வழங்க மறுத்ததோடு, போலீஸ் ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அப்போது பெலிக்ஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், போலீஸ் மனு தாக்கல் செய்யும்வரை அவரை கைது செய்யாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டார். அதோடு, இதுதான் யுடியூப்பை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சரியான நேரம். இப்போது யுடியூப்புகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக் கொண்டார். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு நீதிபதி தடை உத்தரவு பிறப்பிக்காததோடு, அவரை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால், அவரை கைது செய்ய தமிழ்நாடு போலீசார் தீவிரம் காட்டினர். போலீசார் தேடுவதை தெரிந்ததும், பெலிக்ஸ் டெல்லிக்கு தப்பிச் சென்றார். இந்த தகவல் போலீசுக்கு தெரியவந்ததும், திருச்சி தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். நொய்டாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை சென்னைக்கு ரயிலில் அழைத்து வருகின்றனர். பெலிக்ஸ் ஜெரால்டு நேர்காணல் செய்த பேட்டியில், 2022ம் ஆண்டு அதிமுக பிரமுகர்கள் குறித்து ஜெயலலிதாவின் தோழி கீதா, பேசும்போது அதிமுகவினர் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். அதில் பெண்களை அதிமுகவினர் தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்தும் சென்னை சைபர் கிரைம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் ஜெரால்டு முன்ஜாமீன் பெற்றார். அப்போது இனிமேல் இதுபோன்ற அவதூறு கருத்துகளை கூற மாட்டேன் என்று கூறித்தான் முன் ஜாமீன் பெற்றார். தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இவர் மீது கோவை, சென்னை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால்ஒவ்வொரு வழக்கிலும் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0