அமெரிக்காவில் ஜூன் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக விரைவான அதிகரிப்பாக உள்ளது. இந்தியாவின் ஜூன் மாத பணவீக்க விகிதம் 7.1% ஆக உள்ளது. இது ஆர்.பி.ஐ.,யின் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவான 6 சதவீதத்தை விட அதிகம் தான் எனினும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது நிலைமைப் பரவாயில்லை.கோவிட்டால் உலகப் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டு ஏற்கனவே விலைவாசி ஏறிப் போயிருந்தது. இதற்கிடையே கடந்த பிப்ரவரியில் ரஷ்யா – உக்ரைன் போர் வெடித்தது. இதனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் ஐரோப்பாவில் தடைப்பட்டு அவற்றிற்கு தேவை பெருகியது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு நூறு டாலரை தாண்டியது. கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள், சமையல் எண்ணெய்யின் விநியோகமும் பாதிக்கப்பட்டு அவற்றின் விலையும் மளமளவென ஏறியது. இந்நிலையில் அமெரிக்க தொழிலாளர் துறை ஜூன் மாத பணவீக்கம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. பெட்ரோல் விலை ஜூன் மாதத்தில் 11.2% அதிகரித்து நூறு ரூபாய்க்கு மேல் விற்றது. இதனால் நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளது.
சமீப வாரங்களில் பெட்ரோல் விலை குறைந்துள்ளன. மே மாத பணவீக்கம் 8.6% ஆக இருந்தது. ஜூன் மாதம் அது 0.5% அதிகரித்து 9.1% ஆகியிருக்கிறது. இதனால் விரைவில் பொருளாதார மந்தநிலை ஆபத்து உள்ளது என்பதை அமெரிக்க மத்திய வங்கியினரே ஒத்துக்கொள்கின்றனர்.
ஆனால் வட்டி விகித உயர்வு போன்றவற்றின் மூலம் அவற்றை நடுத்தர கால அளவில் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். இந்தியாவில் ஜூன் மாத பணவீக்கம் 7.01% ஆக உள்ளது. இது மே மாதம் 7.04% ஆக இருந்தது. அதிலிருந்து சொர்ப அளவில் குறைந்துள்ளது.
கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு தேவை அதிகரித்த போது ஏற்றுமதியை தடை செய்து விலை பெரியளவில் ஏறாமல் கட்டுப்படுத்தினர். ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எரிபொருள் வாங்குவது போன்றவற்றால் பெட்ரோல் கடந்த 50 நாட்களாக பெட்ரோல் விலை மாற்றமின்றி 103 ரூபாய் என்ற அளவில் உள்ளது. அந்நியச் செலாவணி இருப்பும் போதுமான உள்ளது. சவால்களை எல்லாம் வாய்ப்புகளாக மாற்றி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் மீதும் முதலீட்டாளர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.