பென்டகனையே மிஞ்சிய சூரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டடம்..!!

மெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கட்டடத்தை மிஞ்சும் வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரம் ஜவுளி மட்டுமல்லாமல் வைரம் மற்றும் ரத்தினங்கள் தொழிலின் உலக தலைநகரமாகத் திகழ்ந்து வருகிறது. இங்கு தான் உலகின் 90 சதவீத வைரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த நகரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

சுமார் 35 ஏக்கரில் 15 மாடிகளை கொண்ட கட்டடம் 71 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வளாகம் 20 லட்சம் சதுர அடியில் பொழுதுபோக்கு மண்டலம் மற்றும் வாகன நிறுத்துமிடத்தைக் கொண்டுள்ளது. இந்த கட்டடத்தை இந்திய கட்டடக்கலை நிறுவனமான Morphogenesis வடிவமைத்துள்ளது. சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தில் மிக பிரமாண்ட வைர வர்த்தகம் மையம் அமையவுள்ளது. வைரம் தொழில் சார்ந்த சுமார் 65,000 பேர் பணிபுரியும் இடமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிரதமர் மோடி நவம்பர் மாதம் திறந்து வைக்கிறார். கடந்த 80 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டடமாக அமெரிக்காவில் உள்ள பென்டகன் ராணுவ தலைமையக கட்டடம் இருந்து வரும் நிலையில், அதனை மிஞ்சும் வகையில் இந்தியாவில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..