பிரதமர் மோடி திட்டங்களால் பெண்கள் பிறப்பு வீதம் அதிகரிப்பு- வானதி சீனிவாசன் பேச்சு..!

துரை : ”பிரதமர் மோடி பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவதால், பெண்கள் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது” என்று பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசினார்.

மதுரையில் ‘ஒரு கோடி பயனாளிகளுடன் செல்பி’ திட்டத்தை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: பிரதமர் மோடி, ‘பெண்கள் தலைமை ஏற்கும் முன்னேற்றம்’ வேண்டும் என கருதுவதால், ஆவாஸ் திட்டத்தில் 2 கோடி வீடுகள் வழங்கியபோது, 85 சதவீதம் பெண்கள் பெயரில் கொடுத்துள்ளார். இதனால் பெண்களை ஆண்கள் துன்புறுத்துவது குறைந்து வருகிறது என ஒரு ஆய்வு சொல்கிறது.

இன்று எல்லோருக்கும் வங்கிக் கணக்கு உள்ளது. இதனால் எல்லா திட்டங்கள், மானியங்களில் நேரடியாக மக்கள் கணக்கிற்கே பணம் வந்து சேர்கிறது. இப்படி 48 கோடி பேருக்கு கணக்கு துவங்கியுள்ளோம்.

இதில் 55 சதவீதம் பேர் பெண்கள். ஸ்டார்ட் அப் திட்டத்தில் இளம்பெண்கள் தொழில் துவங்க 1.66 கோடி பேரில் 85 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். அதனால்தான் மோடி திட்டத்தை பெண்களிடம் சேர்க்க ‘செல்பி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, நம்நாட்டில் அதிகமான பெண் குழந்தைகள் பிறக்கத் துவங்கியுள்ளனர். முன்பு ஆயிரம் ஆண்களுக்கு 950 பெண்கள் பிறந்தனர். ஆனால் இன்று ஆயிரத்து 20 பேர் பிறந்துள்ளனர்.

பெண்களிடம் கொடுக்கும் பணம் குடும்பத்தை மேம்படுத்த என்பதால் கொரோனா காலத்தில் பிரதமர் மோடி பெண்களுக்கு பணம் கொடுத்தார். பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்றுவர் என பிரதமர் நம்புகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

‘செல்பி’ திட்டம் மூலம் பெண்களிடம் பா.ஜ., நெருங்குவதற்கு மகளிரணி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும். அரசின் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது கட்சியின் கடமை. அந்த வகையில் தேர்தலுக்காக நாங்கள் தயாராவது யதார்த்தம்.

பெட்ரோல், டீசல் வருவாயால் உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பை மத்திய அரசு உருவாக்குகிறது. இந்த ஒட்டுமொத்த வளர்ச்சியால் பெண்கள் சந்தோஷமாகவே உள்ளனர்.

அடுத்த மாதம் கிராமப்புறங்களிலும் மத்திய அரசின் திட்டத்தை ஆன்லைன் வாயிலாக கொண்டு சேர்க்க சிறப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளோம். ஈரோடு தேர்தலில் மக்களின் அதிருப்தி தமிழக ஆளுங்கட்சி மீது உள்ளது.

அதனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் வெற்றி வாய்ப்பு உள்ளது. மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்குவதாக தாமதமாக அறிவித்துள்ளது அவருக்கு உள்ள பயத்தை காட்டுகிறது.