சபரிமலை: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சபரிமலைக்கு சென்றிருப்பது புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த யாத்திரைக்கு கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்று பலர் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது ஆண்/பெண் என இருபாலரும் சென்று தரிசிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் அதை கேரள கம்யூனிஸ்ட் அரசும் வரவேற்று அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது. ஆனால், இதை எதிர்த்து பாஜக பெரும் போராட்டங்களை நடத்தியது. ஆண்டாண்டு காலமாக இருக்கும் பழக்க வழக்கத்தை மாற்றுவதாக கேரள அரசு மீது பழி சுமத்தியது.
வழிப்பாட்டு தலங்களில் பட்டியலினத்தவர்கள், பெண்கள் இன்னமும் அனுமதிக்கப்படாத கொடுமைகள் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு சாரார் இதை ஐதீகம், பழக்க வழக்கம், பாரம்பரியம், பண்பாடு என்று கூறி நியாயப்படுத்தினாலும், மறுபுறம் மக்கள் இதன் பின்னர் இருக்கும் ஒரு சார்பான தன்மையை புரிந்துக்கொண்டு அதற்கு எதிராக குரலெழுப்ப தொடங்கியுள்ளனர். அப்படியாகதான் இந்த சபரிமலை பிரச்னையும் வெடித்தது.
தீட்டு என்று எத்தனை நாட்களுக்கு பெண்களை இக்கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருக்கப்போகிறீர்கள் என்று சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அனைவருக்கும், அனைத்து வயதினருக்கும் அனுமதி அளித்தது. இதனை அமல்படுத்த முயன்றபோதுதான் கேரள அரசை எதிர்த்து பாஜக போராட்டங்களை நடத்தியது. இப்படியாக இந்த விவகாரத்தில் கேரள அரசை கடுமையாக விமர்சித்தவர்களில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் ஒருவர்.
இந்நிலையில் தற்போது அவர் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்திருக்கிறார். இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் வழிப்பாட்டு உரிமைக்கு குரல் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிதான் வானதி சீனிவாசனின் சபரிமலை யாத்திரைக்கு காரணம் என்று ஒர சாரார் கூறினர். மற்றொரு சாரார் இதனை மறுத்து, 10 வயதுக்கு குறைவான சிறுமிகள் மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்யலாம். அதன்படிதான் வானதி சீனிவாசன் தரிசனம் செய்திருக்கிறார் என்று கூறினர்.
இந்நிலையில் இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு வானதி அளித்துள்ள பேட்டி அமைந்திருக்கிறது. அதாவது, “சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்று வெகு நாட்களாக காத்திருந்தோம். இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மதத்தை சார்ந்தவர்களுக்கும் அவர்கள் தொடர்பான ஆன்மீக பயணம், ஆன்மீக யாத்திரை என்பது முக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது எனது சிறு வயது விருப்பம்.
என் தந்தை 1961ம் ஆண்டு வட கோயம்புத்தூர் ஐயப்பன் கோயிலின் உருவாக்கத்தில் இருந்தவர். இன்று அவர் தான் தலைவராக உள்ளார். சபரிமலை போவதென்பது எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வு. என்னை பொருத்தவரை குறிப்பிட்ட காலம் வரை நான் காத்திருந்து எந்த விதிகளின் படி நாம் போக முடியுமோ அந்த விதிகள் வந்ததன் பின்தான் சென்று வந்துள்ளேன். சபரிமலை அனுபவமே புத்துணர்வான அனுபவமாக எனக்கு அமைந்தது.
எல்லா கோயில்களிலும் ஆகம விதிகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என சில இருக்கும். எந்த இடத்திலும் எந்த வழிபாட்டிலும் பெண்கள் எக்காலத்திலும் பங்கேற்க கூடாதென இந்து மதத்தில் சொல்லப்படவில்லை. பெண்கள் சபரிமலைக்கே செல்லக்கூடாதென்றும் சொல்லப்படவில்லை. சபரிமலையில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள் என்ற பிரசாரமே தவறு.
நான் சபரிமலை சென்றதற்கு கூட, கம்யூனிஸ்ட் அரசாங்கமே காரணமென சிலர் பதிவிட்டனர். ஆனால் நானொன்றும் புதிதாக சபரிமலைக்கு போகவில்லை. இதுவரை பெண்கள் எப்படி சென்றார்களோ அப்படித்தான் நானும் சென்றேன்.
பழக்க வழக்கங்களை நாம் மதிக்க வேண்டும். சீர்திருத்தத்தையும், பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் நாம் பேலன்ஸ் செய்யவேண்டும். எதை மாற்ற வேண்டும், மாற்றக்கூடாதென நாம்தான் முடிவுசெய்ய வேண்டும்” என்றார்.