தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 20 பேரைக் கொண்ட பள்ளி மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம், மாணவர்கள் இடைநிற்றல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில், வருகின்ற ஏப்ரல் மாதம், முதல் வாரத்தில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவானது அரசுப்பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும், இந்த மேலாண்மை குழுவின் செயல்பாடுகளை குறித்த பெற்றோர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள 1712 அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தொடர்பான பெற்றோர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்துள்ளார். மேலும் நகர மன்ற தலைவி பரிதா நவாப், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதன்மை கல்வி அலுவலர், பள்ளி மேலாண்மை குழு ஒன்று விரைவில் அரசுப்பள்ளிகளில் உருவாக்கப்பட உள்ளதாகும், 20 பேரைக் கொண்ட அந்த குழுவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் இந்த குழு அரசு பள்ளிகளில், மாதந்தோறும் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளான கூடுதல் கட்டிடங்கள், கழிப்பிடங்கள், சமையல் கூடம் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளைக் குறித்து விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றிய பின், அரசுக்கும் இதை அனுப்பி வைத்து தேவையான வசதிகளை பெறலாம்.
இதனைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றை தடுக்கவும் முடியும். மேலும் மாணவர்கள் பள்ளியில் இடைநிற்றலை தடுப்பது ஆகியவற்றை கருத்தில்கொண்டு, தமிழக அரசு பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது வேதனை அளிப்பதாகவும், இதற்கு பெண்கல்வி விகிதாச்சாரம் மற்றும் பெற்றோரிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள், தமிழக அரசின் இந்த பள்ளி மேலாண்மை குழுக்கள் கூட்டம் உருவாக்கப்படுவதை குறித்து,மிகுந்த மகிழ்ச்சியும், வரவேற்பையும் அளிப்பதாக கூறியுள்ளனர். மேலும் இந்த குழுக்கள் மூலம் அரசுப்பள்ளிகள் மென்மேலும் தரம் உயர்ந்து, வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளனர்.