அதிமுகவில் புதிதாக இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் பல இடங்களில் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசியவர், எடப்பாடியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வரும் மே 12ம் தேதி, ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, வறுமை ஒழிப்பு தினமாகவும், இளைஞர் எழுச்சி திருவிழாவாகவும், கழக அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது திமுகவின் அடிமட்டம் ஆடிக்கொண்டு இருப்பதாகவும், அதை சரி செய்யவே அமைச்சரவை மாற்றத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். நிதியமைச்சர் பேசிய ஆடியோவில் முதல்வரின் மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி பணத்தை வைத்து கொண்டு, வெள்ளை பணமாக மாற்ற தத்தளித்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். நிதி அமைச்சரை கட்சியை வீட்டு நீக்க முடியவில்லை ஏனென்றால், அவர் சொன்னதில் சத்தியம், உண்மை இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவித்தார். நாட்டின் நிதி அமைச்சர் இன்றைக்கு முதலமைச்சரின் வீட்டு நிதியை கையாளும் ரகசியத்தை கூறியுள்ளார்.
இதற்கு உரிய பதிலை சொல்ல வேண்டும். அமைச்சரவை மாற்றம் என்பது கண்துடைப்பு நாடகமாகும் என விமர்சித்தார். ஏற்கனவே துபாய்க்கு தொழில் முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது தன் முதலீட்டை கொடுக்கவா அல்லது ஈர்க்கவா என்று பல விமர்சனங்கள் வந்தது. அது குறித்து இதுவரை முதலமைச்சர் தெளிவுபடுத்தவில்லை. தற்போது ஜப்பான், சிங்கப்பூருக்கு முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார். அதில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது தன்னுடைய முதலீட்டை கொடுக்கவா? வைக்கவா? என்று மீண்டும் விமர்சனம் எழந்து வருவதாக தெரிவித்தார்.
டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். எடப்பாடியார் தலைமையில் ஒன்னரை கோடி தொண்டர்களும் மற்றும் புதிதாக தங்களை இணைத்துக் கொண்ட 50 லட்சம் தொண்டர்களும் எடப்பாடியார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சென்று கொண்டிருக்கிறார்கள். அதிமுகவை அழிக்க பல்வேறு சூழ்ச்சிகளை ஸ்டாலின் செய்து பி.டீம், சி.டீம் என்பதை இயக்கினார். அந்த டீம்கள் எல்லாம் அதிமுகவின் துரோகத்தின் டீமாக உள்ளதாகவும் கூறினார்.