இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்தால் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆதாயம் பெறுமா..?

இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகவுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தால் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆதாயம் பெறுமா என்பது தொடா்பாக அந்நாட்டுப் பிரதமா் ரிஷி சுனக்கிடம் விளக்கம் கோர எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூா்த்தி. அவா் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் நாராயண மூா்த்தியின் மகள் ஆவாா். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் அக்ஷதா மூா்த்தி வைத்துள்ளாா். இதனிடையே, இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தகத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகவுள்ளது.

அது தொடா்பான 12-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனா். அந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தால் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா அங்கம் வகிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு அதிக பலன் கிடைக்குமா என்பது தொடா்பாக அவரிடம் விளக்கம் கோருவதற்கு எதிா்க்கட்சிகளும், வா்த்தக நிபுணா்களும் திட்டமிட்டுள்ளனா். இது தொடா்பாக தொழிலாளா் கட்சியின் எம்.பி.டேரன் ஜோன்ஸ் கூறுகையில், ‘இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தில் அவருக்கோ, அவருடைய குடும்பத்தினருக்கோ ஏதாவது ஆதாயம் உள்ளதா என்பதை பிரதமா் ரிஷி சுனக் வெளிப்படையாக விளக்க வேண்டும்’ என்றாா். அதே வேளையில், ஜி20 கூட்டத்துக்குத் தலைமை ஏற்றுள்ள இந்தியா, அதன் மாநாட்டை செப்டம்பரில் தில்லியில் நடத்தவுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் அடுத்த மாதம் தில்லிக்கு வருகை தரவுள்ளாா். இரு நாடுகளுக்கு இடையே வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தைகள் நடைபெறும்போது, பிரதமா் ரிஷி சுனக் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்றும் சில எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோரியுள்ளனா். ஒப்பந்தம் கையொப்பமான பிறகே அவா் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மையுடன் கையொப்பமாவதை அவா் உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் கோரியுள்ளன.