சிம்லா: இமாச்சல பிரதேச மாநில தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் பதவியை பெற 7 பேர் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
மேலும் காங்கிரஸில் கோஷ்டி பூசல் உருவாகலாம் என கூறப்படும் நிலையில் நிலைமையை பாஜக உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது. இதனால் இமாச்சல பிரதேச அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி உள்ளது.
நேற்றைய வாக்கு எண்ணிக்கையின்போது பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் டிரெண்ட் மாறி கொண்டே இருந்தது. கடைசியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழந்தது பாஜகவுக்கு பெரிய ஷாக்காக மாறி உள்ளது. மேலும் இந்த ஆண்டு மொத்தம் 7 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆம்ஆத்மியிடம் ஆட்சியை இழந்தது. மாறாக உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த 5 மாநிலங்களை பாஜக தக்க வைத்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழந்துள்ளது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தோல்வி பாஜகவுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இமாச்சல பிரதேச மாநில முதல்வராகும் போட்டியில் மொத்தம் 7 பேர் உள்ளனர். இதில் முதன்மையாக நபராக பிரதீபா சிங் உள்ளார். இவர் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராகவும், எம்பியாகவும் உள்ளார். இவர் இமாச்சல பிரதேசத்தில் 6 முறை முதலமைச்சராக இருந்த வீரபத்ரசிங்கின் மனைவி ஆவார். அடுத்ததாக உச்சரிக்கப்படும் பெயர் குல்தீப் ரத்தோர். இவர் மாநிலத்தின் முன்னாள் தலைவர். தற்போது தியோக் சட்டசபையில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி உள்ளார். அதேபோல் ஹரோலி தொகுதியில் வெற்றி பெற்ற முகேஷ் அக்னிஹோத்ரி, சிம்லா புறநகர் தொகுதியில் வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் வீரபத்ரசிங் மகன் விக்ரமாதித்யா சிங், நாடான் தொகுதியில் வெற்றி பெற்ற சுக்விந்தர் சிங், காங்கிரஸ் மூத்த தலைவரன தாகுர் கவுல் சிங், மற்றும் 6 முறை எம்எல்ஏவாக இருந்தவரும், தால்ஹவுசி தொகுதியில் தற்போது தோற்ற ஆஷா குமாரியும் முதல்வர் பதவியை பிடிப்பதற்கான போட்டியில் உள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநில தேர்தல் பொறுப்பை கட்சி மேலிடம் சார்பில் பிரியங்கா காந்தி ஏற்று கொண்டார். பிரசார வியூகம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றில் பிரியங்கா காந்தி முக்கிய பங்காற்றினார். இதனால் இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதில் பிரியங்கா காந்தி தான் முடிவு செய்வார் என கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் யார்? என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் இமாச்சலில் ஆட்சியை பிடித்தாலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. அதுதான் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதன் அடிப்படையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் முதலமைச்சர் பதவியை பிரதீபா சிங்கிற்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி சிம்லாவில் உள்ள ஓபராய்செசில் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் திடீரென்று திரண்டனர். மேலும் இமாச்சல பிரதேச காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக உள்ள சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் காரை அவர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது பிரதீபா சிங்கிற்கு ஆதரவாக அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விலகி சென்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்க இருக்கும் நிலையில் பிரதீபா சிங்கின் ஆதரவாளர்கள் பூபேஷ் பாகேலின் காரை மறித்தனர். இந்நிலையில் தற்போது எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பணியில் காங்கிரஸ் கட்சியின் இமாச்சல பிரதேச மாநில பொறுப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி பிரதீபா சிங் கூறுகையில், ”மாநிலத்தில் முதலமைச்சர் பதவியை பெற கோஷ்டி மோதல் எதுவும் இல்லை. அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். தேர்தலுக்கு முன்பு கட்சியை வழிநடத்தும் பொறுப்பை சோனியா காந்தி எனக்கு வழங்கினார். முதலமைச்சர் பொறுப்பை எனக்கு வழங்கினால் அதையும் சிறப்பாக செய்து கட்சியை வழிநடத்துவேன் வீரபத்ர சிங்கின் பெயரை கூறி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். இதனால் வீரபத்ர சிங்கின் குடும்பத்தை ஓரங்கட்டுவது சரியாக இருக்காது. மக்கள் அனைவரும் வீரபத்ரசிங்குடன் உணர்வுப்பூர்வமான தொடர்பை கொண்டிருக்கின்றனர். இதனால் தான் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். முதலமைச்சர் பொறுப்புக்கு பலரும் போட்டியில் இருக்கலாம். இதில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது. இருப்பினும் வீரபத்ர சிங்கின் குடும்பத்தை ஒதுக்கிவிட முடியாது” என்றார்.
வீரபத்ர சிங் என்பவர் இமாச்சல பிரதேச மாநிலத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். சோனியா காந்தியின் தீவிர விசுவாசி. இவர் இமாச்சல பிரதேசத்தில் 6 முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு வீரபத்ர சிங் இறந்தார். இவரது மனைவி தான் பிரதீபா சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீபா சிங்கின் இந்த பேச்சால் தற்போது இமாச்சல பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் பதவியை பெற முயற்சிக்கும் தலைவர்கள் ஷாக் அடைந்துள்ளனர். இதனால் அங்கு கோஷ்டி உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் நகர்வுகளை பாஜக உற்றுநோக்க தொடங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் காங்கிரஸில் கோஷ்டிகள் உருவானால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையலாம். மேலும் பல போராட்டங்களை கடந்து இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தாலும் அதனை பாஜகவுக்கு தாரை வார்க்கும் நிலை ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.