தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு.

கோவை மின்சார வாரிய உதவி பொறியாளராக பணிபுரிபவர் சாய்பிரேமன் (வயது 46). இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது எனது மனைவி ராஜலட்சுமி (43) கடந்த 8.1.2018-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் பேரூர் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கீழ் தாடை எலும்பில் விரிசல் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி அவருக்கு டாக்டர்கள் ரத்தம் ஏற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ரத்தம் செலுத்துவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து எனது மனைவிக்கு வாந்தி, வயிற்று வலி, கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அருண்குமார், ஆண்டனி ஆகியோரின் ஆலோசனைப்படி டாக்டர் தமிழ்செல்வன் எனது மனைவிக்கு சிகிச்சை அளித்தார். இருப்பினும் எனது மனைவி ராஜலட்சுமியின் உடல்நிலை மோசமானது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் இதயம் செயலிழப்பு காரணமாக உயிரழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். எனது மனைவியின் உடல் பிரேத பரிசோதனை கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. இதில் எனது மனைவி ராஜலட்சுமிக்கு ரத்தம் செலுத்திய போது, அந்த ரத்தம் அவரது உடலுக்கு பொருந்தாத வேறு வகை ரத்தம் ஏற்றியதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரழந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதும். எனவே ரத்தம் செலுத்திய பின் ஏற்படும் பாதிப்புக்கு சிகிச்சை தராமல் இருந்ததுடன், உரிய உயிர் காக்கும் சிகிச்சை தராமல் மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டது. எனவே எனது மனைவியின் மரணத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி தங்கவேலு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்கள் 3 பேர் இணைந்து ராஜலட்சமியின் கணவர் சாய்பிரேமனுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.