பாதாள சாக்கடை தோண்டும் போது மண் சரிந்து தொழிலாளி உயிருடன் சமாதி

கோவை வடவள்ளி அருகே உள்ள ஐ.ஓ.பி. காலனி, ராஜேந்திரன் நகரில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார்கள். ராஜேந்திரன் நகரில் நேற்று மாலை 4 மணியளவில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க குழி தோண்டும் பணி நடைபெற்றது. இந்த பணியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் அவரது மகன் கவுதம் ( வயது 20) மற்றும் சிலர் ஈடுபட்டிருந்தனர். அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 10 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு மண்ணை அள்ளி மேலே குவித்து போட்டனர். அதன் மேல் நின்று கவுதம் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று மண் சரிந்ததால் அதன் மேல் நின்ற கவுதம் குழிக்குள் விழுந்தார். அவர் மேல் மண் சரிந்து விழுந்தது. இதனால் கவுதம் மண்ணில் புதைந்து உயிருடன் சமாதியானார். இதை பார்த்து அங்கிருந் தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மண்ணை அள்ளி கவுதமை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். இது குறித்து வடவள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மண்ணில் புதைந்திருந்த கவுதமை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.. பாதாள சாக்கடை பணியும்போது தொழிலாளி ஒருவர் உயிரோடு சமாதியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..