என்னது! அப்படியா!! விலை இவ்வளவு தானா… ராயல் என்ஃபீல்டு புல்லட்… 1986-ன் ரசீதை இணையத்தில் பகிர்ந்த ஒருவர்-அதிர்ச்சியில் வாகனப் பிரியர்கள்..!

சென்னை: 1986-ம் ஆண்டின் ராயல் என்ஃபீல்டு புல்லட்டின் விலை குறித்த ரசீதை சமூக வலைதளத்தகில் பகிர்ந்துள்ளார் வாகனப் பிரியர் ஒருவர்.

அதன் விலையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் நெட்டிசன்கள். அப்போது 350சிசி புல்லட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

நம் நாட்டின் குக்கிராமம் முதல் எல்லைப் பகுதி வரை அனைத்து சாலைகளிலும் கடந்த 1949-ல் இருந்து இன்று வரை ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் இரு சக்கர மோட்டார் வாகனம்தான் ராயல் என்ஃபீல்டு புல்லட். பீரங்கியிலிருந்து வெளிவரும் குண்டுகள் போல புட்டு.. புட்டு.. புட்டு.. என புல்லட்டின் சைலன்சலிருந்து வெளிவரும் சத்தமும், சீறி வரும் காளையை போன்ற தோற்றமும்தான் அதன் கெத்து. நம் கிராமங்களில் பண்ணையார் துவங்கி காவல்துறை, இராணுவம், பைக் பிரியர்கள் என பெரும்பாலானவர்களின் கனவு மற்றும் பேவரைட் வாகனம்.

அது எப்படி என்றால் பொல்லாதவன் படத்தில் பிரபுவாக வரும் தனுஷ் கதாப்பாத்திரத்தை போன்றது. ஒவ்வொருவருக்குள்ளும் சிறு பிள்ளையாக இருக்கும் போதே தொடங்குகிற கனவு. இதன் ரசிகர் பட்டாளத்துக்கு எண்ட் என்பதே இல்லை.

இப்போது சந்தையில் 350சிசி திறன் கொண்ட புல்லட்டின் விலை ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.70 லட்சம் வரையில் இருக்கும். ஆனால், இதே 350சிசி புல்லட் 1986-ன் விலைதான் இப்போது நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. புல்லட் ஆர்வலர் ஒருவர் அதன் விலையை ரசீதுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 36 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட அந்த ரசீது ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தீப் ஆட்டோ கம்பெனி எனும் டீலர் கொடுத்துள்ளது. அந்த ரசீதில் 350சிசி புல்லட்டின் விலை ரூ.18,700 என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது புல்லட் 350சிசி மட்டும் இல்லாமல் பல்வேறு மாடல் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.