சின்னம் போனா என்ன பண்றது.. நிர்வாகிகளுடன் திடீர் மீட்டிங் போட்ட ஓபிஎஸ்..!

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், இதற்காக வேட்பாளரை களமிறக்குவது தொடர்பாகவும் நேற்று ஓ பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்த ஆலோசனையில் முக்கியமான சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இன்னொரு பக்கம் பன்னீர் செல்வமும் இங்கே வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம். பாஜக போட்டியிடும் பட்சத்தில் தேசிய கட்சி என்பதற்காக அவர்களுக்கு எங்களின் ஆதரவை தெரிவிப்போம் என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

ஆனால் போட்டியிடுவோம் என்று சொன்னதை தவிர ஓபிஎஸ் பெரிதாக எந்த ஆக்சனும் அதன்பின் எடுக்கவில்லை. ஒரு பக்கம் ஈரோடு கிழக்கில் எடப்பாடி அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறார். நேற்று முதல்நாள்தான் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு திடீரென நியமனம் செய்தது. இரண்டாவதாக இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை இன்றே அறிவிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

இன்னொரு பக்கம் ஓபிஎஸ் சார்பில் எடப்பாடியின் மனுவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இதுவரை யாரும் முறையிடவில்லை. இரட்டை இலை வேண்டும் என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு அணுகவில்லை. அதேபோல் தேர்தல் ஆணையத்தையும் ஓபிஎஸ் தரப்பு அணுகவில்லை. இதெல்லாம் போக வேட்பாளர் தேர்வு தொடர்பாக நேற்று முதல்நாள் மற்றும் அதற்கு முதல்நாள் எந்த ஆலோசனையும் செய்யவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு பின்வாங்குகிறதோ என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் ரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், இதற்காக வேட்பாளரை களமிறக்குவது தொடர்பாகவும் நேற்று ஓ பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையில் முக்கியமான சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டு உள்ளது.

நேற்று நிர்வாகிகளிடம் பேசிய ஓபிஎஸ், நாம்தான் உண்மையான அதிமுக. சின்னத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். நமக்கு சின்னம் போனால் எடப்பாடி அணிக்கும் சின்னம் போய்விடும் என்றே அர்த்தம். சின்னம் போனால் என்ன சின்னத்தை கேட்கலாம் என்று ஓபிஎஸ் விசாரித்து இருக்கிறாராம். இரட்டை இலை போலவே தோற்றம் அளிக்கும் சின்னம் எதையாவது கேட்கலாமா என்று ஓபிஎஸ் நேற்று ஆலோசனை செய்து இருக்கிறாராம். அதோடு தொகுதியில் 30 கோடி செலவு செய்ய தயாராக இருக்கும் 2 பேரை பட்டியலிட்டு அதில் யாரை களமிறக்கலாம் என்றும் ஓபிஎஸ் பேசி இருக்கிறாராம். இன்னொரு பக்கம் பாஜக இன்னும் முடிவு எடுக்கலவில்லை. பாஜக போட்டியிடுவதாக இருந்தால், நம் நிர்வாகிகள் பாஜகவிற்காக களமிறங்க வேண்டும், பணிகளை செய்ய வேண்டும் என்றும் நேற்று நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பேசி இருக்கிறாராம். அதோடு இரட்டை இலை சின்னத்தை கேட்டு எடப்பாடி தாக்கல் செய்த மனுவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்யவும் ஓபிஎஸ் இந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளாராம்.