கடிகாரம் என்பது நேரத்தை காட்ட, அதனை ஒருங்கிணைக்க பயன்படும் ஒரு கருவி. கையில் கட்டப்படும் கடிகாரத்தினை கைக்கடிகாரம் என்பர். பொதுவாக கடிகாரம் எளிதில் தூக்கி செல்லக்கூடியதாக வடிவமைக்கப்படுவதில்லை. நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் பழைய மனித கண்டுபிடுப்புகளில் ஒன்றான இது பொதுவாக இயற்கையான அளவீடான ஒரு நாளினை விட குறுகிய கால அளவை அளக்க பயன்படுத்தப்படுகின்றது.
பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் கடிகாரங்கள் இயற்பியல் செயல்முறைகளில் பல வளர்சியினை கண்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் தான் clock என்ற வார்த்தை உபயோகத்திற்கு வந்தது.
இந்த சொல் clocca என்ற இலத்தீன் மொழியிலிருந்து தான் வந்தது. சூரிய மணிகாட்டி என்பது சூரியனின் ஒளியினையும் அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டும் கடிகாரத்தினைக்குறிக்கும். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் முதலில் பிரித்தது என்று கூறப்படுகிறது.
காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது. சூரியனின் ஒளி இரவில் கிடைக்காதென்பதால் ஒரே சீராக எரியும் திரியினைக்கொண்டு இரவில் காலத்தைக்கணக்கிட்டனர். மணலை சிறு ஓட்டையில் வடித்தும் காலத்தை அளந்தனர்.
அதே வேளையில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீரை ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இந்தியா மற்றும் சீனாவிலும் இத்தகைய கடிகாரங்கள் புழக்கத்தில் இருந்தன. கி.பி.1510-ம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார்.
பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார்.
இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கும் கைக்கடிகாரத்தை உருவாக்கியவர்கள் ஆபிரகாம் மற்றும் லூயி. இவர்கள் 1810 இல் ராணி ஒருவருக்காக முதல் கைக்கடிகாரத்தை தயாரித்தார்கள். 1956 இல் எப்சன் நிறுவனம் தான் குவார்ட்ஸ் வாட்ச்களை தயாரிக்க ஆரம்பித்தார்கள். பெரிய திரையில் இருந்து சிறியதாக மாறினால்தான் அதன் பெயர் வளர்ச்சி. அதன்படி மிகப் பெரிய கடிகாரத்தில் இருந்து இப்பொழுது ஒரு செல் போட்டால் இயங்கக்கூடிய ஒரு கடையில் கைக்கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளார்கள்.
இதற்கு தொழில்நுட்பமே முக்கிய காரணம். அதுவும் fire resistant, water resistant என்று அந்த கைகடிகாரத்திற்கு ஏதும் பாதிப்பு ஏற்படாதவாறு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இப்பொழுது fastrack, apple என பல வகையான வாட்ச்களில் நேரம் மட்டுமின்றி நம்முடைய ஆரோக்யம் சம்பந்தமானவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் ஒருசில வாட்ச்களில் நம் நாட்டின் நேரம் மட்டுமின்றி மற்ற நாடுகளின் நேரத்தையும் தெரிந்து கொள்ளலாம். என்னதான் இப்படி புதுப்புது டிசைன்களில் கைக்கடிகாரங்கள் வந்தாலும் நேரம் என்பது நம்முடைய கையில் தான் இருக்கிறது. அதை வீணடிக்காமல் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது தான் இந்த கடிகாரம் நமக்கு சொல்லும் பாடம்.