கீவ்: பலம் வாய்ந்த ரஷ்ய படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் வகையில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் குண்டுகளை அந்நாட்டு மக்கள் தயாரித்து வருகின்றனர்.
5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் மக்கள் பங்கேற்கலாம் என்று உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து ஏராளமான குடிமக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொண்டு துப்பாக்கிசூடும் பயிற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய படைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்காக அந்நாட்டு மக்கள் பெட்ரோல் குண்டுகளை ஆயிரக்கணக்கில் தயாரித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுடன் தர்மகோல் துகள்களை கலந்து அவர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை தயாரித்து வருகின்றனர். இதற்காக பொது இடங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து குண்டுகளை தயாரிக்கின்றனர். ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடும் முயற்சியில் உதவுவதற்காக உக்ரைனில் உள்ள ஒரு மதுபான ஆலை கடந்த சில நாட்களுக்கு முன்பு பீர் தயாரிப்பை கைவிட்டு முழு அளவில் பெட்ரோல் வெடிகுண்டுகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.