மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தால், வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து மாரத்தான், தொடா் ஓட்டம், இருசக்கர வாகனப் பேரணி போன்ற பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சாா்பில் கைவிரலில் அடையாள மை வைக்கப்பட்டிருப்பதை போன்று 8 அடி உயரம் 6 அடி அகலத்தில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இலச்சினை முழுவதும் கருஞ்சீரகம், வெந்தயம், கசகசா உள்ளிட்ட பொருள்களை 6.25 கிலோ எடையில் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இலச்சினையானது மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, வேளாண்மைத்துறையின் சாா்பில், கே.கே. நகா் பகுதியில் உள்ள உழவா் சந்தையில் சிறுதானியங்களால் 8 அடி உயரம், 4 அடி அகலத்தில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இலச்சினையானது கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, வரகு, கொள்ளு உள்ளிட்ட தானியங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியரகத்தில் உள்ள இலச்சினையை தோ்தல் பாா்வையாளா்கள் தினேஷ்குமாா், அமித்குமாா், ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் விமலா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சரவணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டு அதனை வடிவமைத்த அலுவலா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0