வாஷிங்டன்: அதிபர் தேர்தலுக்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியை சேர்ந்த தொழிலதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அடுத்த அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பே போட்டியிடுவார் எனக் கூறப்பட்டு வந்த சமயத்தில், அக்கட்சியில் இருந்தே அவருக்கு எதிராக செல்வாக்குமிக்க ஒரு நபர் களமிறங்குவது டிரம்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள விவேக் ராமசாமி, கேரளாவை பூர்வீகமாக கொண்ட மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அதிபர் தேர்தல் ஜுரம் அமெரிக்காவில் பரவத் தொடங்கிவிட்டது. ஜனநாயக, குடியரசுக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
2024 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதிகாரப்பூர்வமாக இது அறிவிக்கப்படவில்லை. அதே போல, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுபடியும் தேர்தலில் நிற்பார் என்றே சில தினங்களுக்கு முன்பு வரை கூறப்பட்டு வந்தது. குடியரசுக் கட்சியில் இருந்து வேறு யாரும் தன்னை எதிர்த்து வேட்பாளர் போட்டியில் நின்றுவிடக் கூடாது என்பதில் டிரம்ப்பும் தீவிரமாக இருந்தார். இதற்காக, குடியரசுக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடம் பேசி தனக்கு ஆதரவையும் அவர் திரட்டி வந்தார்.
இந்நிலையில், டிரம்ப்பை எதிர்த்து அவரது கட்சியில் இருந்தே பல நிர்வாகிகள் தற்போது அதிபர் வேட்பாளராக வரத் தொடங்கியுள்ளனர். அதன்படி, கடந்த வாரம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தெற்கு காரோலினா ஆளுநராக இருந்தவருமான நிக்கி ஹேலி அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். டிரம்ப் ஆட்சிக்காலத்தில் ஐநாவுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்டிருக்கிறார் நிக்கி ஹேலி. அரசியல் அனுபவம் நிறைந்திருப்பதால் நிக்கி ஹேலிக்கு குடியரசுக் கட்சியில் கணிசமான ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
விவேக் ராமசாமி வேட்பு மனு தாக்கல்
இந்த சூழலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமி, அமெரிக்காவில் மிகப்பெரிய மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரும் கோடீஸ்வரரான இவர், அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர் ஆவார். இவருக்கும் குடியரசுக் கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விவேக் ராமசாமி அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குள்ளேயே டிரம்ப், விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி உட்பட 10-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளதால், அவர்களுக்குள் தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெறுபவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.