கொழும்பு: இலங்கையில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் டீசல், சிலிண்டர்கள், உரம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையில் மீண்டும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின் வெட்டு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அது கலவரமாக வெடித்துள்ளது. இதில் 130 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும், மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மேயர் துஷார சஞ்சீவ் உள்ளிட்டோர் வீடுகளில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் லேக் வீதியில் உள்ள வீட்டில் 80 எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்பட்டது அம்பலமானது. முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சே வீட்டில் 300 யூரியா உர மூட்டைகள், 3,000 லிட்டர் டீசல், 200 நெல் மூட்டைகள் பதுக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தின் பண்ணை வீட்டில் 400 மூட்டைகள் யூரியா உரம் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண்ணை வீட்டில் பதுக்கப்பட்டிருந்த உர மூட்டைகளை விவசாயிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் பொருட்களை பதுக்கியதால் இலங்கை மக்கள் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.