டெல்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்தியா வருகை தந்துள்ளார்.
இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் இந்தியா – அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளையும் சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்தியா வருகை தந்தார். டெல்லி விமான நிலையம் வந்த ஆண்டனி பிளின்கனை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியா – அமெரிக்கா இடையே இன்று நடைபெறும் ‘2+2’ பேச்சுவாா்த்தையில் இந்தியா சார்பில் ராஜ்நாத்சிங் மற்றும் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்கள்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரும் இந்தியா வருகை தந்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “இந்தியா அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் போது பிராந்திய அளவிலான பிரச்சினைகள், குவாட் போன்ற அமைப்புகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை குறித்து இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளின்கனுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தனித்தனியே ஆலோசனை நடத்துவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.