கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு எங்கும் இல்லாத வகையில் நிபந்தனைகள்: மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வு காண வலியுறுத்தல்

கோவை விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2010 – ல் 635.33 ஏக்கரில் நில ஆர்ஜித திட்டத்தை அப்போதைய தி.மு.க அரசு அறிவித்தது. பின்னர் மீண்டும் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், நில ஆர்ஜிதப் பணிகள் வேகமெடுத்தன. இதற்காக ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்னும் 14 ஏக்கர் நிலம் மட்டுமே ஆர்ஜிதம் செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு நிலங்களை, இந்திய விமான நிலைய ஆணையகத்திடம் (ஏ.ஏ.ஐ) ஒப்படைக்க சில நிபந்தனைகளை விதித்து உள்ளது. விரிவாக்கத்துக்காகப் பெறப்படும் நிலத்தில் ஏ.ஏ.ஐ சார்பில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தனியாரிடம் ஒப்படைத்தால் விதிமுறைகள் மாறும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பெரும்பாலான நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் நிபந்தனையை ஏற்பது குறித்து ஏ.ஏ.ஐ இறுதி முடிவு எடுக்காததால் விரிவாக்கத் திட்டம் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, :-

“விரிவாக்கத் திட்டத்துக்கு நிலங்களை ஒப்படைக்க தமிழக அரசு விதித்து உள்ள நிபந்தனை போல, வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இந்தியாவில் ஏற்கெனவே சில விமான நிலையங்களை நிர்வகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனவே, தமிழக அரசின் நிபந்தனை குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது” என்றனர்.

தொழில்துறையினர் கூறும்போது, :-

“கோவை மட்டுமின்றி ஒட்டுமொத்த கொங்கு மண்டல வளர்ச்சிக்கும் கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து விரைவில் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஓடுபாதை நீளத்தை அதிகரித்து, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி, விமான சேவைகளை அதிகரித்தால் தொழில் நகரமான கோவையில் தொழில்துறையில் மேலும் வளர்ச்சி அடையும், விமான நிலைய பயணிகளின் எண்ணிக்கை 75 லட்சமாக உயரும்” என்றனர்.

விமானப் பயணிகள் கூறும்போது, :-

“தூத்துக்குடியில் 600 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய ரூ.50 கோடி, மதுரையில் 300 ஏக்கருக்கு ரூ.400 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால், கோவை விமான நிலையத்துக்கு ரூ.2,600 கோடி வரை அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. எனவே, இந்தப் பணிகளை தனியாருக்கு வழங்கினால், சில நிபந்தனைகளை எதிர்கொள்ள வேண்டுமென அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி, உரிய தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி கூறும்போது, :-

“விமான நிலைய விரிவாக்கப் பணிகள், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி உள்ளன. எனினும்,நிலங்கள் அனத்தும் ஆர்ஜிதம் செய்ய இணைக்கப்பட்டு உள்ளதால், விரிவாக்கத் திட்டப் பணிகளை தொடங்க தடையில்லை. தமிழக அரசின் முடிவின் படி, அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.