சூரியன் மறைந்த பிறகு பெண்களை கைது செய்யக்கூடாது என்றும் , இது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வடிவமைத்து 8 வாரங்களுக்குள் நீதிமன்றம் முன் சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 46 (4) செக்ஷன்படி பெண்களை சூரியன் மறைந்த பிறகும், தோன்றும் முன்பும் கைது செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்களை கைது செய்யும்போது பெண் காவலர் உடன் இருக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக மாஜிஸ்திரேட் இடம் முன்பாகவே அனுமதி பெற வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது.
கோவையில் வசித்து வரும் சல்மா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி, இரவு நேரத்தில் சல்மாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் காவல்துறை இதற்கு ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நஷ்ட ஈடு வழங்க முடியாது என்று நீதிபதிகள் இந்த வழக்கை நிராகரித்துவிட்டனர். ஆனால் எந்த அவசர காரணமாக இருந்தாலும் அல்லது எந்த சூழ்நிலையிலும் பெண்களை இரவு நேரத்தில் அல்லது அதிகாலையிலோ கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
மேலும் தமிழக அரசு பெண்களை இரவில் கைது செய்வது தொடர்பாக தெளிவான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பான வழிமுறைகளை 8 வாரங்களுக்குள் நீதிமன்றம் முன் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.