தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் 1-ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நில நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நாளை மறுதினம் ஜூன் 7ம் தேதி பள்ளியானது திறக்கப்படவுள்ளது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாமல் இருக்கும் நிலையில் பள்ளிகள் திறந்தால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்திருந்தனர். எனவே பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமைச்செயலகத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.