மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடி நேற்றோடு முடிவுக்கு வந்துள்ளது.
ஆளுநரின் உத்தரவை ஏற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பாகவே முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். உத்தவ் தாக்கரே இன்று பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கருதி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அஸ்ஸாமில் இருந்து கோவா வந்து தங்கி இருந்தனர். உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார் என்ற செய்தியை கேட்டவுடன் கோவாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.
இது குறித்து அதிருப்தி எம்.எல்.ஏ.ஒருவர் கூறுகையில், “நாங்கள் உத்தவ் தாக்கரேயின் ராஜினாமாவை கொண்டாடவில்லை. பால் தாக்கரேயின் கொள்கை வெற்றி பெற்றதைத்தான் கொண்டாடினோம்” என்று தெரிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டே இரவே எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மும்பையிலும் பாஜக தலைவர்கள் தாஜ் ஓட்டலில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடினர். இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்திற்கு பிறகு ஆளுநரை சந்தித்து பட்னாவிஸ் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டேயிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதோடு அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று கோவாவில் இருந்து மும்பை வரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முதலில் கூடி ஆலோசனை நடத்தி விட்டு ராஜ்பவன் சென்று ஆளுநரை சந்திக்கின்றனர். அவர்கள் பாஜக அரசு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கிறோம் என்று நேரில் சென்று ஆளுநரிடம் தெரிவிக்க இருக்கின்றனர்.
உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துவிட்டதால் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. `கடந்த இரண்டரை ஆண்டில் ஆண்டில் பாஜக பல முறை உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க முயன்றது. ஆனால் முடியவில்லை. இப்போது சிவசேனாவில் இருந்த ஒருவரை கொண்டே ஆட்சியை கவிழ்ப்பை சாத்தியப்படுத்தி இருக்கிறது’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.