திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதி: பார்த்ததும் அப்படியே கையை பிடித்துக் கொண்ட பன்வாரிலால் புரோஹித் – நெகிழ்ச்சி சம்பவம்..!

டெல்லி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் இன்றும் மிகவும் நெருக்கமாக காணப்பட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கிறார். பல்வேறு முக்கிய திட்டங்கள், தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டிய விளையாட்டு திட்டங்கள் குறித்து அவர் கோரிக்கை வைக்க உள்ளார்.

மேலும் டெல்லியில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதையடுத்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் உடன் சந்திப்பு நடத்த உள்ளார். இந்த பயணத்தின் ஒரு கட்டமாக பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உள்ளார். அதை தொடர்ந்து திமுக அலுவலகத்திற்கு இன்று செல்ல உள்ளார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை கடுமையாக விமர்சனம் செய்தது. முக்கியமாக பன்வாரிலால் சில இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டதை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது. பன்வாரிலால் சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று புகார் வைத்தது. மேலும் துணை வேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும் புகார் வைக்கப்பட்டது. இது போக சில ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. பன்வாரிலால் புரோஹித்திற்கு திமுக சிம்ம சொப்பனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த மோதல் கொஞ்சம் தணிந்தது. முதல் சட்டசபை கூட்டத்தொடரில் இப்படியான மோதல்கள் எதுவும் இல்லை. அதோடு ஆளுநர் பன்வாரிலால் அப்போது அரசு தயாரித்த உரையை மாற்றங்கள் இன்றி படித்தார். அவர் திமுக அரசுடன் கொஞ்சம் நட்பாக இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்தே பன்வாரிலால் ஆளுநர் பதவி தமிழ்நாட்டில் இருந்து மாற்றப்பட்டது. தற்போது பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான் தனது இல்ல திருமண விழாவிற்கு பன்வாரிலால் சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் , அவரின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு வேறு பணிகள் இருந்ததால் அவரால் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றதும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. வாசலுக்கு வந்து உதயநிதியை பன்வாரிலால் வரவேற்றார். அதன்பின் மணமக்களிடம் சென்று அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பன்வாரிலால் மிகவும் எமோஷனலாக காணப்பட்டார்.

அதிமுக தரப்பில் இருந்து இந்த நிகழ்விற்கு யாரும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவினருடன் இவர் நெருக்கமாக இருந்தும், அதிமுக தரப்பில் இருந்து யாரும் இந்த நிகழ்விற்கு செல்லவில்லை. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் கையை பன்வாரிலால் இறுக்கமாக பிடித்துக்கொண்டார். அவரின் கையை விடாமல் பிடித்துக்கொண்டு தமிழ்நாடு அரசு நிலவரங்கள் குறித்து விசாரித்தார். அதோடு முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்தும் விசாரித்தார். ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இந்த திருமண நிகழ்வில் ஒன்றாக இருந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.