திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு என்று இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லை. எனவே பொழுதுபோக்கிற்காக ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் ‘டாப் செங்காட்டுபட்டி’ ஆகிய மலை கிராமங்கள் நல்ல இயற்கை அழகுடன் காணப்பட்டாலும் அங்கு சுற்றுலா செல்லும் அளவிற்கு போதிய வசதிகள் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக இந்த பகுதி பெரிய அளவில் வளர்ச்சி அடையாமல் உள்ளது. இப்பகுதியில் 3,700 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்த பச்சை மலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு முதல்கட்டமாக, கோரையாறு அருவி சீரமைப்பு, ஜிப் லைனிங், புங்கே ஜம்பிங், வில்பயிற்சி தளம், பெயிண்ட்பால், பழங்குடி வாழ்வாதார பூங்கா, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.2.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் கோரையாற்றில் குளிப்பதற்கும், அங்கே தங்குவதற்கான விடுதிகள், வியூ பாயிண்ட், உடை மாற்றுவதற்கான அறைகள், உள்ளிட்ட வசதிகளை செய்ய தமிழக வனத்துறை மற்றும் தமிழக சுற்றுலாத்துறை ஆகியோருக்கு ரூ.2.3 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பச்சைமலையில் செல்போன் சிக்னல் பிரச்னை இருந்தது. இந்த பகுதி சுற்றுலா தலமாக மாறும்பட்சத்தில் செல்போன் சேவைகள் முழுமையாக கிடைக்க 5 புதிய செல்போன் சிக்னல் கோபுரங்கள் அமைக்க பிஎஸ்என்எல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஓரிரு இடங்களில் சிக்னல் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பச்சைமலையை பொறுத்தவரை சாலை வசதிகள் முழுமையாக போடப்பட்டுள்ளது. பச்சைமலையை மேம்படுத்துவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஒரு முழுமையான ஆய்வு அறிக்கை தயார் செய்து அரசிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தக் குறிப்பில் பச்சைமலையில் உள்ள கோரையாறு அருவியை சீரமைத்து 2 அடுக்காக தண்ணீர் தேங்கி நின்று வழிந்தோடும்படி வடிவமைக்கவும், வழிந்து வரும் தண்ணீரை தேக்கி வைப்பதற் காக 63 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மலையேறு வதற்கான வசதிகள் ஏற்படுத்துவதற்கு 2கிமீ, 5கிமீ, 7கிமீ என 3 தடங்களாக பிரிக்கப்பட்டு அந்த வழித்தடங்களில் 500மீட்டருக்கு ஒரு இடத்தில் இளைப்பாறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தவும், 2 ஏக்கரில் தண்ணீர் சாகச விளையாட்டு தளம் அமைக்கவும், 2.5கி.மீ அளவில் குளம் அமைத்து அதில் படகு சவாரி செய்வதற்கான வசதி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கலெக்டரின் ஆய்வறிக்கையின்படிதான் தமிழக அரசு பணிகளை செய்ய ஊரக வளர்ச்சி முகமைக்கு ரூ.2.7 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. திருச்சியில் சொல்லிக் கொள்ளும்படி சுற்றுலாத்தலம் ஏதுமில்லை இந்தத் திட்டம் நிறைவேறினால் பொது மக்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0