திருச்சி சூர்யா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்.

திமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. இவர் திமுகவில் பயணித்து வந்தார். திமுகவில் இருந்தவரை கனிமொழி எம்பியின் ஆதரவாளராக அறியப்பட்டார். அதன்பிறகு அவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து கொண்டார்.
பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக உள்ளார். அதோடு பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார்.இந்நிலையில் தான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து திருச்சி எஸ் சூர்யா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் சாய் சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ் சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சூர்யாவின் பதவிகள் பறிப்பு பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடி நீக்கம்
இந்நிலையில் தான் திருச்சி சூர்யாவின் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியின் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் விவகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை தொகுதியிலும் தோல்வியடைந்தார்.
இந்த தேர்தல் தோல்வியை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின அதாவது நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்.
தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள்.அதிமுக – பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை என்றார்.
மேலும் பாஜகவில் ரவுடிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலை மற்றும் தமிழிசைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது கட்சி மேலிடம் வரை சென்ற நிலையில் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற போது தமிழிசை சவுந்தரராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் கண்டித்த வீடியோ வெளியானது. அதன்பிறகு அண்ணாமலை நேரில் தமிழிசையை சந்தித்து கொண்டனர். இதன்மூலம் இருவருக்கும் இடையேயான கருத்து மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் அண்ணாமலையின் ஆதரவாளராக உள்ள திருச்சி சூர்யா, தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். பல்வேறு யூடியூப் சேனல்கள் மற்றும் வலைதளங்களில் தமிழிசை சவுந்தரராஜனை அவர் தாக்கி பேசினார். யூடியூப்பில் திருச்சி சூர்யா அளித்த பேட்டியில் தமிழிசை சவுந்தரராஜன் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எனக்கு சந்தேகம் உள்ளது. அதேவேளையில் தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவுக்கு எதிராகவும், மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும் செயல்படுகிறார். அவர் மீண்டும் பாஜக தலைவரானால் நான் கட்சியை விட்டு சென்றுவிடுவேன் என்று கூறினார்.
சூட்டை கிளப்பிவிடும் திருச்சி சூர்யாவை
கட்சி மேலிடத்துக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் பாஜகவில் திருச்சி சூர்யாவின் அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அண்ணாமலையின் ஆதரவாளராக உள்ளதால் அவர் கட்சியில் சாதாரண தொண்டராக தொடர்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் திருச்சி சூர்யா மீது பாஜக இப்படி நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல.
ஏற்கனவே பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திருச்சி சூர்யா இதற்கு முன்பு 6 மாதம் வரை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது இரண்டாவது முறையாக அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த முறை கட்சியில் இருந்து நீக்கப்படாமல் பதவி மட்டும் பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக திருச்சி சூர்யா அவரது பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் இரண்டாவது முறையாக தான் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.