திருச்சி: திருச்சியில் திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்.பி., திருச்சி சிவா ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து சிவாவின் கார் மற்றும் வீட்டினை நேருவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.திருச்சி சிவா திமுக எம்.பி.,யாக உள்ளார். இவரது வீட்டின் அருகே உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழா இன்று (மார்ச் 15) நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழில் எம்.பி.,யின் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அமைச்சர் கே.என்.நேரு திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது, சிவாவின் ஆதரவாளர்கள், கே.என்.நேருவிற்கு எதிராக கோஷமிட்டதாக தெரிகிறது.
நேருவின் காரையும் வழிமறித்தனர். ஆத்திரமடைந்த நேருவின் ஆதரவாளர்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள், சிவா வீட்டிற்கு வந்து, கார் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தினர்.அங்கிருந்த போலீசாரும் தடுக்கவில்லை என கூறப்படுகிறது. அமைச்சரின் காரை மறித்த சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்குதல் கைது செய்யப்பட்ட திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கும் வந்த நேருவின் ஆதரவாளர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து சிவாவின் ஆதரவாளர்களை தாக்கினர். இதில் அவர்களை தடுத்த பெண் போலீஸ் ஒருவரை கீழே தள்ளியதில் அவர் காயமடைந்தார்.