திருச்சி மணப்பாறையில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இனாம்ரெட்டியபட்டி மற்றும் அயன்ரெட்டிய பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தலா ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக்கட்டிடங்கள், வையம்பட்டி மற்றும் தேக்கமலை கோவில்பட்டியில் தலா ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் என புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முன்னதாக பள்ளிக்கு வந்த அமைச்சருக்கு குழந்தைகள் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர். விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, திட்ட இயக்குனர் கங்காதரணி, வையம்பட்டி யூனியன் சேர்மன் குணசீலன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.