ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நான்கு தனிப்படை போலீசார் பணி நீக்கம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி.

திருச்சியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களிடம் போலீசார் பறிமுதல் செய்து வழக்கும் தொடுத்து வருகிறார்கள். அதுபோல் திருச்சியில் ஏர்கன் வைத்து பறவைகளை வேட்டையாடிய மூவரின் குற்றத்தை மறைக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நான்கு தனிப்படை போலீசாரை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் உத்தரவிட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம் உட்கோட்டத்திற்கு உதவி ஆய்வாளார் லியோனி ரஞ்சித்குமார் தலைமையில், வீரபாண்டி, ஷாகுல் ஹமீது மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கபட்டு இருந்தது.இந்த தனிப்படையினர் கடந்த மே 9ஆம் தேதி அன்று வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு சட்டவிரோதமாக ஏர் கன் ஒன்றினை வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கல்லி அடைக்கம்பட்டியைச் சேர்ந்த சதாசிவம், ராமசாமி, மலைக்குடிப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். மேலும், பணத்தினை வளநாடு கைகாட்டியில் உள்ள ஏரிக்கரைக்கு அருகில் அன்றைய தினமே சதாசிவம் என்பவரின் உறவினர் விஜயகுமார் மூலம் தனிப்படையினர் பணம் பெற்றுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு (9487464651‌) தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இது சம்பந்தமாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டை உறுதிசெய்ததன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது 3 பிரிவின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார் உட்பட நான்கு காவலர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரவுடிகளுடனும் சமூகவிரோதிகளோடும் காவல்துறையினருக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.