திருச்சி தாராநல்லூரில் பிரசித்தி பெற்ற செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருத்தேர் உற்சவ விழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கடந்த 12 ஆம் தேதி அம்மா மண்டபத்தில் இருந்து தீர்தக்குடம் கொண்டு வரப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் இரவில் சிம்மம், அன்னம், யானை குதிரை, பூத வாகனங்களிலும், முத்து பல்லக்கிலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் முதல் தேரில் செல்லாயி அம்மனும், 2-வது தேரில் ஓலைப்பிடாரி அம்மனும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். தங்களது வீடுகளுக்கு முன்பாக தேர் வந்தபோது செல்லாயி அம்மனுக்கு பூ, பழங்களை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். மேலும் ஓலைப்பிடாரி அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலி கொடுத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை T.M.கருணாநிதி தலைமையில் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0