கோவையில் திருநங்கை எரித்துக் கொலை..? ஒருவர் கைது..!

கோவை காந்திபுரம் ஆம்னி பஸ் நிலையம் அருகே நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ரத்தினபுரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த இடத்தில் உள்ள ஒருகுடிசைக்குள் இருந்த கட்டிலுக்கு அடியில் உடல் பாதி எரிந்து அழுகிய நிலையில் அரை நிர்வாண கோலத்தில் ஒரு பெண் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. மேலும் அருகில் மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில் கிடந்தன. இதையடுத்து போலீசார் தடயயியல் நிபுணர்களை வரவழைத்தனர் .அவர்கள் தடயங்களை சேகரித்தனர். இதை தொடர்ந்து கருகி கிடந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கும் .அவர் யார் ?என்று அடையாளம் தெரியவில்லை.இந்த சம்பவம் நடந த 4 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது . அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் விசாரணையில் அவர் அபிராமி என்ற திருநங்கை என்பது தெரிய வந்தது.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக இன்று ஒருவர் சிக்கினார் .அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.