சென்னை சென்ட்ரல் உள்பட 4 இடங்களில் விரைவில் வருகிறது ரயில் பெட்டி உணவகங்கள்..!

சென்னை: சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 4 இடங்களில் ரயில் பெட்டி உணவகங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் கூறினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில் மூலமாக 4 முதல் 5 லட்சம் பயணிகள் பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் தினசரி வருகின்றனர். அவர்களுக்கு ரயில் நிலையத்தில் புதுவிதமான உணவு ரகம், சுவையை அளிக்க சென்னை கோட்ட தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரயில்வே நிர்வாகத்திடம் உள்ள பழைய மற்றும் பழுதடைந்த மின்சார ரயிலின் 2ம் வகுப்பு ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றலாம் என்று ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த ரயில் பெட்டிகளை டெண்டர் முறையில் தனியாருக்கு ஏலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடப்பட்டன. அதனடிப்படையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பக்கவாட்டில் ரயில் பெட்டி உணவகத்தினை ஏற்படுத்தும் வண்ணம் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயணிகளுக்கு புதுவிதமான உணவு மற்றும் வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் ரயில் பெட்டிகளையே ஓட்டல் போல தனியார் நிறுவனங்கள் மூலமாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. இதில், ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் டெண்டர் அடிப்படையில் அந்த ஒப்பந்தத்தை எடுத்த தனியார் நிறுவனத்திற்கு 2ம் வகுப்பு ரயில் பெட்டி ஒன்று வழங்கப்படும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டுமல்லாமல் பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் மற்றும் பெரம்பூரிலும் நிறுவப்பட உள்ளது.

அதன்படி, தற்போது அமைக்கப்பட்டு வரும் உணவகத்தில் ஒரே நேரத்தில் 40 வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம். ரயில் பெட்டி உணவகத்தின் உள் கட்டமைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும். இந்த உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்க கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளதால் பயணிகள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் வந்து உணவுகளை சாப்பிடலாம். ரயில் பெட்டி உணவகம் விரைவில் திறப்பதற்கான திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது. வடஇந்தியாவில் இதுபோல உணவகங்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை சென்ட்ரலில் அமையும் இந்த உணவுக்கும் ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்..