கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151- வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை 9.30 மணியளவில், சென்னை, இராஜாஜி சாலை, துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை – பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 02.09.1872 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்விப் படிப்பை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியை திருச்சியிலும் பயின்று 1894 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார்.
மேலும், சமூக சேவையிலும், அரசியல் பணியிலும் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதல் சுதந்திர தின விழாவில், சென்னையில் வஉசி திருவுருவச் சிலை, தூத்துக்குடி மாநகர முதன்மைச் சாலைக்குத் வஉசி பெயர், அவர் வாழ்ந்த இல்லம், மணிமண்டபங்களில் ஒலி- ஒளிக் கண்காட்சி, அவர் படித்த பள்ளி மறுநிர்மானம் மற்றும் புதிய கலையரங்கம், பல்கலைக் கழகத்தில் ஆய்விருக்கை, நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ள வஉசி அனைத்து நூல்களும் குறைந்த விலையில் மறுபதிப்பு, கப்பல் கட்டுமானத்துறையில் பங்காற்றிவரும் சிறந்த தமிழருக்கு வஉசி பெயரிலான ரொக்கப் பரிசுடன் கூடிய விருது, வஉசி மறைந்த நாள் தியாகத்திருநாளாக அறிவிப்பு, வ.உ.சி தொடர்பான நூல்கள் மின்னுருவாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.