இன்று ஆசிரியர் தினம் – ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து – 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கிறார்..!

டெல்லி: நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களை உருவாவதற்கு ஆசிரியர்களே காரணம் என, ஆசிரியர் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் உட்பட 45 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிக்க உள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணியை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும்.

ஆசிரியர் தினமான இன்று, ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் நலனுக்காக எல்லா வகையிலும் உழைக்க தயாராக இருக்கும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாவதற்கு ஆசிரியர்களே காரணம் என்று பாராட்டியுள்ளார் இதேபோல், பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தினத்தன்று, சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுக்காக, இணையதளம் வாயிலாக நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் இடம்பெற்றுள்ளார்.

ஆசிரியர் தினத்தின்று, கற்பித்தலில் தனிச்சிறப்புடன் விளங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, ஆசிரியர் தினமான இன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டை சேர்ந்த ராமச்சந்திரன் உட்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கப்படுகிறது.

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் உட்பட 45 ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். மாலை 4:30 மணிக்கு லோக் கல்யாண் மார்க்கில், ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வென்றவர்களுடன் கலந்துரையாடுகிறார். அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் மாணவர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்தி வரும் சிறந்த ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடி கௌரவிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.