டெல்லி: நாட்டின் மினி லோக்சபா தேர்தலாக கருதப்படும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக உ.பி. சட்டசபை தேர்தலில் மொத்தம் 61.04% வாக்குகள் பதிவாகி இருந்தது. 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. பஞ்சாப் தேர்தலில் மொத்தம் 71.95% வாக்குகள் பதிவாகின. 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. உத்தரகாண்ட் தேர்தலில் 65.37% வாக்குகள் பதிவாகின.
40 இடங்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கும் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. கோவாவில் 79.61% வாக்குகள் பதிவாகின.60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு பிப்ரவரி 8 மற்றும் மார்ச் 5-ந் தேதி என 2 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மணிப்பூர் தேர்தலில் சுமார் 74% வாக்குகள் பதிவாகின. இத்தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் நாளை எண்ணப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகள். பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலிதளம், பாஜக கூட்டணி களத்தில் உள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. மணிப்பூரில் பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி, நாகா மக்கள் முன்னணி, மக்கள் தேசிய கட்சி, களத்தில் நிற்கின்றன. கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.
403 தொகுதிகளைக் கொண்ட உ.பி. சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை. 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற 59 இடங்கள் பெற வேண்டும். 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. 60 இடங்களைக் கொண்ட மணிப்பூரில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் 5 மாநிலங்களில் கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்: உத்தரப்பிரதேசம்: பாஜக 39.67% 312 இடங்கள் ; பகுஜன் சமாஜ் 22.23% 19 இடங்கள்; சமாஜ்வாதி கட்சி 21.82% 47 இடங்கள்; காங்கிரஸ் 7 முதல்வர்: யோகி ஆதித்யநாத்
பஞ்சாப்: காங்கிரஸ்- 38.5% 77 இடங்கள்; அகாலி தள்- 25.4% 15 இடங்கள்; ஆம் ஆத்மி- 23.72% 20 இடங்கள்; பாஜக 5.39% 3 இடங்கள்.
தற்போதைய முதல்வர் – சரண்ஜித்சிங் சன்னி
உத்தரகாண்ட்: பாஜக- 46.51% 56 இடங்கள்; காங்கிரஸ்- 33.49% 11 இடங்கள்; தற்போதைய முதல்வர்- புஷ்கர் சிங் தாமி
மணிப்பூர்: பாஜக -36.2% 21 இடங்கள்; காங்கிரஸ் 35.1% 28 இடங்கள்; நாகா மக்கள் முன்னணி 7.1%; தேசிய மக்கள் கட்சி 5%; தற்போதைய முதல்வர் பைரேன்சிங்
கோவா: பாஜக 32.5% 13 இடங்கள்; காங்கிரஸ்- 28.4% 17 இடங்கள்; மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 11.3%; தற்போதைய முதல்வர்- பிரமோத் சாவந்த்