ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அது இப்போது சாத்தியமாகி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் 245 அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தைவான் பல்கலைகழகம், என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 14 மாணவர்களுக்கு முதலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ், மடிக்கணினி மற்றும் விருதுகளை வழங்கினார்.
பின்னர் விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
‘பள்ளிக் கல்வித்துறையை பொறுத்த வரை தினம்தோறும் புதிய முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் கொண்டாட்டத்திற்கு உரிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. உங்கள் பெற்றோர்களுக்கு இருக்கும் அதே அன்புடனும் அக்கறையுடனும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைத்து உயர்கல்விக்கு செல்ல வேண்டும்.
முன்பு கல்வி என்பது நமக்கு எட்டாக் கனி, ஆனால் இன்று எல்லாரும் படிக்க நீதி கட்சியின் சமூகநீதி செயல்பாடுகள் தான் காரணம். அதனை மேலும் சிறப்பாக திமுக அரசு செய்து வருகிறது.
ஒரு சிறிய தூண்டுதல் இருந்தால் போதும், தமிழ்நாட்டு மாணவர்கள் தூள் கிளப்பி விடுவார்கள். அது போல் சின்ன தூண்டுதல் தான் நான் முதல்வன் போன்ற திட்டங்கள். உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் அளவை அதிகரிக்க வேண்டும் என்று தான் அனைவருக்கும் ஐஐடி திட்டம். முன்னர் உயர்கல்வி நிறுவனங்களில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும், போட்டி தேர்வுகள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் முறையாக இல்லாமல் இருந்தது. அதற்கு இப்போது வழி ஏற்படுத்தி கொடுத்து உள்ளோம்.
கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச்சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 75, ஆனால் இந்த ஆண்டு 225 மாணவர்கள் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு ஐஐடியில் படிக்க சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் ஒரே ஒருவரே. ஆனால் இந்த ஆண்டு 6 பேர் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து மத்திய பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு 6 பேர் படிக்க சென்றனர், ஆனால் இந்த ஆண்டு 20 பேர் படிக்க உள்ளார்கள். மொத்தம் 225 அரசு பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு சென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து உள்ளது என்பதே உண்மை.
உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் நுழைவது தான் சமூகநீதி. இன்று 38 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதன் விளைவு தான் இத்தனை மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அது இப்போது சாத்தியமாகி வருகிறது.
இனி அடுத்த ஆண்டுகளில் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு தேர்வாகி வரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வாகி செல்லும் மாணவர்கள் தான் வழிகாட்ட வேண்டும். படிக்கும் காலத்தில் கவன சிதறல்கள் இருக்க கூடாது. உங்களை இந்த அளவுக்கு வளர்த்து விட்டுள்ள பெற்றோர், ஆசிரியர்களை நினைவில் கொள்ளுங்கள்.’ இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.