திருவண்ணாமலை: “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தினை, திருவண்ணாமலை மாவட்டம், போளுர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பாஸ்கர பாண்டியன துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், போளுர் ஊராட்சி ஒன்றியம், குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்; ஆய்வு செய்து, எண்ணும் எழுத்தும், கற்றல் திறன் மூலம் மாணவர்களின் கல்வி திறனை ஆய்வு செய்தார். மேலும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது, எத்தனை மாணவர்கள் இத்திட்டம் மூலம் பயனடைகிறார்கள், அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும்  ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர் போன்றவற்றின் சுத்தம் குறித்தும், மாணவர்களின் அடிப்படை சுகாதாரத்தை சீர் திருத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போளுர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் துறை சார்ந்த ஆய்வுகள் எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.வட மாதிமங்கலத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு ஆய்வு மேற்கொண்டார். ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கேட்டறிந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் கல்வித்திறனை கேட்டறிந்தார்.
பின்னர் களம்பூர் பேரூராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை கேட்டறிந்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், மருத்துவர்களின் வருகை பதிவேடு, மருந்து இருப்பு போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார்.  கஸ்தம்பாடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் இலங்கைத் தமிழர் முகாமில் ஆய்வு மேற்கொண்டு அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மகளிர் திட்டம் மூலம் சுடர் ஒளி மகளிர் சுய உதவிக் குழுவுக்கு தொழில் புரிய ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.  இருளர் காலனி குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மேலும், அப்பகுதி மக்கள் மின்சார வசதி, ஆதார் கார்டு, ஜாதி சான்றிதழ், தெருவிளக்கு போன்ற அடிப்படை தேவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியனிடம் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்., கூடுதல் ஆட்சியர் ரிஷப்., மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் தனலட்சுமி, மாநில தடகளச் சங்கத் துணைத்தலைவர் கம்பன்,  சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.