திக்… திக்.. நிமிடங்கள்!! எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை 15 முறை கொடூரமாக குத்திய 24 வயது இளைஞர்..!!

வாஷிங்டன்: சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திகுத்து நடந்துள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. 75 வயதான சல்மான் ருஷ்டி, கடந்த சில ஆண்டுகளாகவே பிரிட்டன் நாட்டில் வாழ்ந்து வருகிறார்.

இவர் பல்வேறு புத்தகங்களை எழுதி இருந்தாலும் இவரது தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகம் கடும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

1988ஆம் ஆண்டு தி சாத்தானிக் வெர்சஸ் என்ற இவரது புத்தகம் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இதற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூட பல இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வெளிப்படையாகவே அறிவித்தனர். இதன் காரணமாகவே அவர் பிரிட்டன் நாட்டில் வசித்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் பொதுநிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளவில்லை.

ஈரான் மதகுருவான ஆயத்துல்லா ருஹோலா கூட சல்மான் ருஷ்டி கொல்லப்பட வேண்டியவர் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்தச் சூழலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டு இருந்தார். அந்தச் சமயத்தில் யாருமே எதிர்பாராத வகையில் மேடையிலேயே ஒருவர் சல்மான் ருஷ்டிவை சரமாரியாகக் கத்தியால் குத்தினார்.

உடனே அருகில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியவரை பிடித்த, சல்மான் ருஷ்டியை காப்பாற்றினர். அவர் உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், “நிகழ்ச்சி தொடங்க இருந்த சமயத்தில் திடீரென மேடையில் ஏறிய ஒருவர் சல்மான் ருஷ்டியை கீழே தள்ளி தாக்கினார். பின் திடீரென கத்தியை எடுத்து சரமாரியாக குத்த தொடங்கினார். இது எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக 24 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்த ஹாதி மாதர் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல எதற்காகத் தாக்குதல் நடத்தினார் என்பது குறித்தும் துல்லியமாகத் தெரியவில்லை. இருப்பினும், எஃப்.பி.ஐ உடன் இணைந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

அங்குக் கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். ஹாதி மாதர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் தானா இல்லை வேறு நாட்டில் இருந்து குடியேறியவரா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தற்போது வரை கிடைத்துள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது ஹாதி மாதர் தனியாகவே செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சல்மான் ருஷ்டி மேடைக்கு வந்த சில நொடிகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கத்தி குத்து நடந்துள்ளது. தற்போது வென்டிலெட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வரும் அவர், ஒரு கண்ணை இழக்கும் அபாயம் உள்ளது. சல்மான் ருஷ்டி மிகவும் இக்கட்டான சூழலில் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.