பெரம்பூர்: ஆன்லைனில் வீடு தேடுபவர்களை குறிவைத்து, அடுத்தவர் வீட்டை வாடகைக்கு விடுவதாக 7 பேரிடம் ரூ.36 லட்சம் நூதன மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். கொடுங்கையூர் அம்பிகா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர், மனைவி, குழந்தை, மாமியார், மாமனார் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வேறு வீடு லீசுக்கு போக வேண்டும் என நினைத்த மணிகண்டன், ஆன்லைன் மூலம் விளம்பரம் கொடுத்திருந்தார். இதை பார்த்து கோபி மகாராஜா என்பவர், மணிகண்டனை தொடர்பு கொண்டு, தங்களிடம் வீடு உள்ளது. எனவே, கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 132வது தெரு பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.
அதன்படி, மணிகண்டன் அங்கு சென்று பார்த்தபோது, கோபி மகாராஜா மற்றும் அவரது மனைவி, மகன் உள்ளிட்டோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்கள், முத்தமிழ் நகர் 3வது தெரு காவேரி சாலை பகுதியில் தங்களுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனை ரூ.5 லட்சத்திற்கு லீசுக்கு விட முடிவு செய்துள்ளோம், என கூறியுள்ளனர். மணிகண்டனுக்கு அந்த வீடு பிடித்ததால், இதற்கு முன்பணமாக ரூ.2 லட்சம் பேசி முடிக்கப்பட்டு, ரூ.1 லட்சம் காசோலையாகவும், ரூ.1 லட்சம் பணமாகவும் மணிகண்டன் கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறிய தேதியில் வீடு ஒப்படைக்கப்படவில்லை. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி கோபி மகாராஜா வீட்டிற்கு சென்ற மணிகண்டன், இதுகுறித்து கேட்டபோது, வீட்டில் இருந்த கோபி மகாராஜா கத்தி மற்றும் துப்பாக்கியை காண்பித்து மணிகண்டனையும் அவர் உடன் சென்ற நபரையும் மிரட்டி உள்ளார்.
அதிர்ச்சியடைந்த மணிகண்டன், இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், கோபி மகாராஜா ஆன்லைனில் வீடு தேடுபவர்களை குறிவைத்து ஏமாற்றியதும், அவர் குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீடு அவருடைய வீடு இல்லை என்றும், அவரிடம் இருந்தது டம்மி துப்பாக்கி என்பதும் தெரிந்தது. மேலும் விசாரணையில், கோபி மகாராஜா காண்பித்த வீடு கோவிலம்பாக்கம் நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் (42) என்பவருக்கு சொந்தமானது என்பதும் குமாரிடமிருந்து வீட்டை லீசுக்கு வாங்கி, அதனை பலரிடம் காண்பித்து ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.
மேலும், கோபி மகாராஜா உடன் இருக்கும் நபர் அவரது மனைவி கிடையாது என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் கோபி மகாராஜாவின் மனைவி எனக் கூறிய அம்பிகா (43), அவரது மகன் பிரவீன் ராஜ் (19) மற்றும் அந்த வீட்டை லீசுக்கு விட்ட குமார் (42) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான கோபி மகாராஜாவை தேடி வருகின்றனர். அடுத்தவரின் வீட்டை காண்பித்து இதுவரை 7 பேரிடம் ரூ.36 லட்சம் வரை இவர்கள் ஏமாற்றியதும் தெரியவந்தது.