தூத்துக்குடி மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை..!

தூத்துக்குடி: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் சுழல் காற்று காரணமாக தூத்துக்குடியில் இருந்து மீனவர்கள் 3ஆவது நாளாக வியாழக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
வாங்கக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதியில் சுழல் காற்றானது 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் 3ஆவது நாளாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லாததால், அவைகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று இனிகோ நகர் புதிய துறைமுக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.