திருச்சி: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிக வெற்றிதான் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியததாவது : அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடுத்துக் கொள்ளவில்லை. எனவே இந்தத் தீர்ப்பு, பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிக வெற்றி தான். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேண்டுமானால் 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற வழி வகுக்கும்.
தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இது தற்காலிக பின்னடைவு தான். பழனிசாமியுடன் அமமுக இணைய வாய்ப்பு இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கமல்ஹாசனின் சமீபத்திய செயல்பாடுகள் நகைச் சுவையாக உள்ளன.
மக்களவைத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் அணியில் இருப்போம். இல்லையென்றால் தனித்து களம் காண்போம் என்றார். அப்போது, மாநிலப் பொருளாளர் ஆர்.மனோகரன், நிர்வாகி ராஜசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.