எனதருமை இளைஞர்களே, சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது, உங்களுக்கும் 50 வயது இருக்கும். அடுத்த 25-26 ஆண்டுகள், என்னுடன் அணிவகுத்து உங்கள் வாழ்வின் இந்த பொன்னான காலங்களை எனக்குக் கொடுத்தால், நம் நாடு வளர்ந்த நாடாக மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று நாட்டின் 76வது சுதந்திரதினத்தை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்பு, நாட்டு மக்களுக்கு உரையாற்றியனார். திறமை மட்டும் தான் இந்தியாவின் அடித்தளம் என்று குறிப்பிட்ட பிரதமர், ” அடிமை மனநிலையில் இருந்து விலகி நமது திறமைகளை மீளப் பெற வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மொழி மீதும் பெருமை கொள்ள வேண்டும். தெரிந்த மொழியாக இருந்தாலும், தெரியாததாக இருந்தாலும், அனைத்து மொழிகளும் நம் நாட்டில் பேசப்பட்டு வரும் மொழி, முன்னோர்களின் மொழி என்ற பெருமிதமும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
உலகத்திற்கு இந்தியாவை அறிய வைக்க வேண்டும் என்று பேசிய பிரதமர் மோடி, “உலகம் இன்னும் எவ்வளவு காலம் தான் நம்மை நிர்ணயிக்கும்? உலகத்தின் தகுதிச் சான்றிதழில் எத்தனை காலம் தான் வாழ்வோம்? நமக்கான உறுதிப்பாட்டை நாமே அமைத்துக் கொள்ள வேண்டாமா? 130 கோடிகள் கொண்ட ஒரு நாடு இதனை செய்யாமல் இருக்க முடியுமா? எந்த சூழ்நிலையிலும் நாம் மற்றவர்களைப் போல தோற்றமளிக்க முயற்சிக்கக்கூடாது. நமது சொந்த ஆற்றலுடன் வளர்வது நமது சுபாவமாக இருக்க வேண்டும். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வேண்டும். ஏழு கடல்கள் வரை அடிமைத்தனத்தின் கூறுகள் நம் மனதில் இருக்கக்கூடாது. அடிமைத்தனத்தில் இருந்து மீள்வதற்கான உறுதியை புதிய தேசியக் கல்வி கொள்கை வழங்கும்” என்று தெரிவித்தார்.
5ஜி தொழில் நுட்பத்தை குறித்து பேசிய அவர், ” 5ஜி தொழில்நுட்ப காலத்தில் இந்தியா நுழைந்திருக்கிறது. நாட்டின் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு போன்ற ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியை இந்த தொழில்நுட்பம் ஊக்குவிக்கும். இந்த தசாப்தம் இந்தியாவின் தொழில் நுட்ப தசாப்தம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்