ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பாஜக போட்டியிடுமா, போட்டியிடாதா என்று இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் பாஜக முன்பு 3 ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கின்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியலில் முக்கியமான இடைதேர்தலாக உருவெடுத்து உள்ளது. ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கு இணையாக அல்லது அதைவிட அதிக சுவாரசியம் கொண்டதாக இந்த இடைத்தேர்தல் மாறி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. பாஜக போட்டியிட்டால் பாஜகவிற்கு ஆதரவு தருவோம் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பாக வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளார். கண்டிப்பாக வேட்பாளரை களமிறக்குவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதில் அதிமுகவின் நிலைப்பாட்டையும் எடப்பாடி பழனிசாமி பாஜக தரப்பிடம் தெரிவித்துவிட்டார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக இந்த முறை அதிமுகவே போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனு வழங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இன்று முதல் வரும் ஜனவரி 26 வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக முக்கியமான நிலைப்பாடு ஒன்றை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாமல் போனால்.. ஒன்று எடப்பாடி தரப்பை ஆதரிக்க வேண்டும். அல்லது ஓ பன்னீர்செல்வம் தரப்பை ஆதரிக்க வேண்டும். எடப்பாடியை ஆதரித்தால், அவரின் தரப்பு வெல்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக எடப்பாடிதான் ஒற்றை தலைமை என்று ஆகிவிடும். முக்கியமாக பாஜகவே ஆதரித்துவிட்டது. இவர்தான் ஒற்றை லீடர் என்ற நிலை வந்துவிடும். எடப்பாடி இப்படி ஒற்றை தலைமை ஆவதை பாஜக விரும்பாது. முக்கியமாக கொங்கில் எடப்பாடி இடத்தை பிடிக்க நினைக்கும் அண்ணாமலைக்கு இது எதிராக திரும்பும்.
மாறாக ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்தால் அதுவும் பாஜகவிற்கு எதிராக திரும்பும். எடப்பாடி ஒரு பக்கம் போட்டியிடுவதால் அதிமுக வாக்குகள் சிதறும். இதனால் கொங்கில் பலம் இல்லாத ஓபிஎஸ் தரப்பு 3 அல்லது 4வது இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். பாஜக ஆதரித்தும் ஓபிஎஸ் தரப்பு படுதோல்வி அடையும் நிலை ஏற்படும். அப்படி நடந்தால் அதுவும் பாஜகவிற்கு சிக்கலாக முடியும். வலிமையற்ற அணியை ஆதரித்துவிட்டதாக பாஜக மீதே விமர்சனங்கள் வைக்கப்படும். அதோடு எடப்பாடியை ஒதுக்கிவிட்டு ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்ததாக பாஜக மீது விமர்சனங்களை வைக்கப்படும்.
இதனால் தற்போது பாஜகவிற்கு 3 ஆப்ஷன்கள் மட்டுமே மிச்சம் இருக்கிறது. ஒன்று எடப்பாடி – ஓபிஎஸ் ஆகியோரை இணைப்பது. ஈரோடு இடைத்தேர்தலுக்கு முன்பாக இருவரையும் ஒன்றாக இணைப்பது. இருவரையும் ஒரு கூடைக்கு கீழ் கொண்டு வருவது. ஆனால் இதற்கு வாய்ப்பு குறைவு. இரண்டு தரப்பையும் இணைக்க இப்போதே பாஜக முயலுமா? அதற்கு எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வி உள்ளது. இரண்டாவது ஆப்ஷன் பாஜகவே இங்கே போட்டியிடுவது. இதன் மூலம் எடப்பாடி – ஓபிஎஸ் இருவரில் ஒருவர் என்ற முடிவை பாஜக இப்போது எடுக்க வேண்டிய தேவை இருக்காது.
மூன்றாவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சம்மதிக்க வைத்து அவரின் வேட்பாளர் யுவராஜாவை இங்கே களமிறக்க செய்வது. இதன் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை இங்கே போட்டியிட செய்து அவருக்கு ஆதரவு தருவது. பாஜக போட்டியிட பயந்தால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை களமிறக்கலாம். அப்படி செய்தால் பாஜக அவரை ஆதரிக்க முடியும். ஓபிஎஸ் இந்த கூட்டணியை ஆதரிப்பதா, தனித்து போட்டியிடுவதா என்ற முடிவை எடுக்க முடியும். தற்போது பாஜக முன் இருக்கும் பாதுகாப்பான் 3 ஆப்ஷன்கள் இதுதான். இதில் பாஜக எந்த ஆப்ஷனை கையில் எடுக்கும் என்பதே கேள்வியாக உள்ளது.