புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ள உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால் மீண்டும் வழக்கு தொடரலாம் என உத்தரவிட்டுள்ளது.
தனுஷ்கோடியிலிருந்து இலங்கை கிழக்கு கடற்கரைப் பகுதி வரை சுண்ணாம்பு கற்களால் ஆன பாலம் போன்ற அமைப்பை ராமர் பாலம் என இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சேது சமுத்திர திட்டத்தால், ராமர் பாலம் சிதைந்துபோகும், எனவே, அந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராமர் பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லாத வகையில் சேது சமுத்திரத் திட்டம் மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2015-ம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கை சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்தார். அந்த மனுவில், ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் பட்சத்தில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை கோரிய தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்யாமல் இருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தொடர்ந்து பதிலளிக்காமல் காலம்தாழ்த்தி வந்த நிலையில், ராமர் பாலம் தொடர்பான வழக்கில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, மனுதாரர் வேண்டுமென்றால், தன்வசமுள்ள கூடுதல் ஆவணங்களை உரிய அமைப்பிடம் கோரிக்கையாக கொடுக்கலாம்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட சுப்பிரமணியன்சுவாமி, “மத்திய அரசு இந்த விவகாரத்தை வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு அமைச்சரையோ அல்லது அதிகாரிகளையோ நான் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த விவகாரம் குறித்த மத்திய அரசின் முடிவை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள கால அவகாசத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அந்த முடிவில் ஏதேனும் குழுப்பம் ஏற்பட்டால், நான் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்களை நீதிமன்றம் பதிவு செய்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, மனுதாரருக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நிவாரணம் தேவைப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம்’ எனக் கூறி ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த இடையீட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.