நீர் தேக்கப் பகுதிகளில் உள்ள மதகுகள் சரிபார்க்கபட வேண்டும்-கோவை கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் பல்வேறு நீர் தேக்கப் பகுதிகளில் உள்ள மதகுகள் சரிபார்க்கப்பட வேண்டும். பல்வேறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள மதகுகள் சிதளம் அடைந்துள்ளது. ஷட்டர்கள் பழுது பார்க்கப்பட வேண்டும். பரம்பிக்குளம் ஆழியார் போன்ற ஷட்டர் விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும். நீர் ஆதாரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் நெல் உற்பத்தி செலவு ஒரு குவிண்டாளுக்கு ரூ.1805 ஆகிறது. கேரளாவில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டகளுக்கு ரூ. 2820 கேரளா அரசு தற்சமயம் அறிவித்துள்ளனர். அதே போல் தமிழகத்தில் நெல் விவசாயிகளுக்கு ரூ.2820 வழங்க வேண்டும். கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் கிராம பொது பாதைகளில் ஓரமாக பயன்படுத்தாத கிணறுகள், விவசாயத்துக்கு பயனுள்ள கிணறுகள் உள்ளது. குறிப்பாக காரமடை ஒன்றியம், தொண்டாமுத்தூர், புத்தூர், தேவராயம்பாளையம் போகும் வழியில் உள்ள கிணறுகள் பாதுகாப்பாக இல்லாத நிலையில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. அரசு உடனடியாக சாலையோரம் உள்ள கிணறுகளை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும். தமிழகத்தில் வனப்பரப்பு அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் கோவைக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.