130 பேர் ஏற்றி சென்ற பள்ளி பேருந்து… போலீசுக்கு பயந்து சந்துக்குள் நிறுத்தப்பட்ட தால் மூச்சுத்திணறி மயக்கமடைந்த மாணவிகள்..

மதுரைமாவட்டம் திருப்பாலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவிகளின் வீடுகளுக்கு பள்ளிக்கு சொந்தமான வாகனம் மூலமாக 130 க்கும் மேற்பட்ட மாணவிகளை ஒரே வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டதை அறிந்த பள்ளி வாகன ஓட்டுனர் அதே பகுதியில் உள்ள சந்து ஒன்றுக்குள் பள்ளி வாகனத்தை கொண்டுசென்று 30 நிமிடமாக நிறுத்தியதாக கூறப்படுகின்றது.

இதனால் மாணவிகளுக்குள் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் ஜனனி, ரம்யா, பாவனா , பிரஜிதா ஆகிய 4 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர்.

உடனே அவர்கள் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மாணவிகள் 4 பேரும் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் தகவல் அளித்துள்ளார். மேலும் ஒரே வாகனத்தில் அதிகளவிலான மாணவிகளை அழைத்து சென்றது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருத்திகா விளக்கம் அளித்துள்ளார்.