பெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்த நிலையில் கரைபுரண்டு ஓடிய மழைநீரில் மோட்டார் சைக்கிள்கள் அடித்து செல்லப்பட்டன.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. இந்த பருவமழை காலம் முடிந்தாலுமு கூட தற்போதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் அதிகளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கர்நாடகா தலைநகர் பெங்களூரிலும் கனமழை பெய்து வருகின்றன. மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை பெங்களூர் நகரின் பல இடங்களில் மழை பெய்ய துவங்கியது. பெங்களூரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்ய துவங்கியது. எச்ஏஎல் ஏர்போர்ட், மகாதேவபுரா, தொட்டனேகுந்தி, சீகேஹள்ளி பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பும் மக்கள் பாதிக்கப்பட்னர். குறிப்பாக இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை இந்த பகுதிகளில் கனமழை பெய்தது.
அதேபோல் ஜேசிநகர், சிவாஜி நகர், இந்திரா நகர், விஜயநகர், மைசூர் ரோடு, ஆர்டி நகர், பன்னரக்கட்டா ரோடு, ஒயிட்பீல்ட்,ஓல்டு ஏர்போர்ட் ரோடு, ஜேபி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல இடங்களிலும் கனமழை பெய்தது. வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சேஷாத்ரிபுரம், ப்ரீடம் பார்க் மற்றும் பானசாவடி பகுதிகளில் உள்ள சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கி இருந்தன. மகாதேவபுரம் & மாரத்தஹள்ளி இடையே, கோரமங்களா, இந்திராநகர் கேஎச் சாலைகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து வாகனங்கள் மீது விழுந்தன.
இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அதோடு பார்க்கிங் பகுதிகளில் நுழைந்த தண்ணீரால் கார் உள்ளிட்ட வாகனங்கள் மூழ்கின. இது ஒருபுறம் இருக்க பெங்களூர் சிவாஜிநகரில் ஒல்டு மார்க்கெட் ரோடு பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள்கள் அடித்து செல்லப்பட்டன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிலர் மழையை பொருட்படுத்தாமல் தண்ணீருக்குள் இறங்கி அடித்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்களை சிரமப்பட்டு மீட்டனர். தற்போது இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன.
பெங்களூரில் நேற்று இரவு பெய்த மழையால் இன்று பல இடங்களில் போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சுரங்க பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளில் சென்று வருகின்றனர். மேலும் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் வெள்ள தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத துவக்கத்தில் பெங்களூரில் சில இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இந்த மழை இன்னும் சில நாட்கள் தொடரும் என கூறப்பட்டுள்ளதால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் வழக்கத்தை விட இந்த ஆண்டு பெங்களூர் நகரில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்துள்ளது. அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் அக்டோபர் 18 ம் தேதி வரை பெங்களூரில் மொத்தம் 1,709 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 105 மில்லிமீட்டர் அதிகமாகும். இந்த காலக்கட்டத்தில் கடந்த 2017ல் 1,696 மில்லிமீட்டர் மழையும், 2019ல் 900 மில்லி மீட்டரும், 2020ல் 1,200 மில்லி மீட்டரும், 2021ல் 1500 மில்லமீட்டர் மழையும் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி ஆகஸ்ட் 30ம் தேதி பெங்களூரில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஞாயிற்றுக்கிழமை ஒருநாளில் மட்டும் 130 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. அந்த சமயத்தில் பெங்களூர் மாநகராட்சியின் மகாதேவபுரா மண்டலத்தில் தான் வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்தது. பெங்களூர் பெல்லந்தூர், சார்ஜாபுரா, மகாதேவபுரா, சந்தாபுரா, பொம்மனஹள்ளி, இந்திரா நகர், மாரத்தஹள்ளி, வர்த்தூர், ஒயிட்பீல்டு, அவுட்டர் ரிங் ரோடு உள்பட ஐடி நிறுவனங்கள் உள்ள இடங்களில் மழை நீர் புகுந்தன.
மேலும் புதிதாக திடீரென உதயமான புற நகர் பகுதிகள்தான் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊழியர்கள் நிறுவனத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும் இது பெரும் விவாதத்துக்கு உள்ளானதை தொடர்ந்து நீர்வழித்தடங்களை உள்ள ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இருப்பினும் நேற்றைய மழையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.