நடுவானில் விமானத்தின் எஞ்சினில் கோளாறு திருச்சியில் அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூர் நோக்கி கிளம்பியது. இந்த விமானத்தில் 167 பயணிகள் பயணித்தனர்.
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், அருகில் உள்ள திருச்சி விமான நிலையத்தில் அந்த விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சி விமான நிலையம் நோக்கி வந்த விமானத்திலிருந்து, அவசரமாக தரையிறங்க விமானிகள் அனுமதி கோரினர். திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதற்குள்ளாக மீட்பு படையினரும் உடனடியாக விமான ஓடுதளம் அருகே விரைந்தனர். இதைத்தொடர்ந்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 167 பயணிகளும் எவ்வித பாதிப்பு இன்றி பத்திரமாக தரையிறங்கினர். இந்த அவசர தரையிறக்க நிகழ்வின்போது பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு மீட்புப் படையினர் முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தின் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பயணிகளை வேறு விமான மூலம் பெங்களூருக்கு அனுப்பவும் ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருவனந்தபுரம் பெங்களூர் செல்லும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சிராப்பள்ளிக்கு திருப்பி விடப்பட்டது. பெங்களூருக்கு விமானத்தை இயக்க மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று, பெங்களூர் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், அதன் துணை மின் பிரிவில் இருந்து தீ எச்சரிக்கை வந்ததால் டெல்லிக்குத் திரும்பி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 175 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி விமான நிலையத்தில் திடீரென்று தரை இறங்கிய விமானத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.