தொடர்ந்து ஒவ்வொருவராக வெளியேறும் கட்சியினர்… கரைகிறதா அதிமுக..? ஆதங்கத்தில் மூத்த தலைவர்கள்..!

திமுகவில் இருந்து தொடர்ந்து பலரும் விலகி வரும் நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதங்கத்தை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அதிமுக பொதுச் செயலாளராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்குப் பின்னரும் அதிமுக ஆட்சி தொடர்ந்தது. ஆட்சி நிறைவு பெற்றதும் கட்சி…? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பிரிந்து நிற்கும் தலைவர்களால் கரைகிறதா அதிமுக? என்ற கேள்வியும் எழுகின்றது.

அமைச்சர்கள், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, ரகுபதி, முத்துசாமி, ராஜ கண்ணப்பன், சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் திமுகவில் சேர்ந்தவர்கள். ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தொடரும் நிச்சயமற்ற நிலையால், அந்த கட்சியில் இருந்து விலகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2017ம் அண்டு முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட சிலர், கூட்டணிக் கட்சியான பாஜகவிற்கு சென்று விட, பலரும் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்களைக் கூட்டி, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்த வி.கே.சசிகலா, பெங்களூரு சிறைக்கு சென்ற பின் அரசியல் காட்சிகள் அதிரடியாக மாறின. குறிப்பாக ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்த பின்னர், அப்போது, வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டனர். அவர்களில் பலரும் தற்போது அக்கட்சியில் இருந்து விலகி நிற்கின்றனர்.

டிடிவி தினகரனுக்கு நெருக்கமாக இருந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், மானாமதுரை மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோர் திமுகவில் அடுத்தடுத்து சேர்ந்தனர். நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோரும் விலகினர். தற்போது, புகழேந்தி மட்டும் ஓ.பி.எஸ் ஆதரவு அணியிலும், சம்பத் திராவிட இயக்க பேச்சாளராக திமுக ஆதரவு நிலைப்பாட்டிலும் உள்ளார். பெங்களூரு சிறையில் இருந்து வி.கே.சசிகலா விடுதலையானதும் அவர் தலைமையில் ஒரு அணியும் உருவாகியது.

கடந்த ஜூன் மாதம் எழுந்த ஒற்றைத் தலைமை பேச்சால் இன்னும் இரண்டு பிரிவுகளாகியுள்ள நிலையில், கட்சியில் இருந்து விலகிச் செல்வோரின் எண்ணிக்கையும் தொடர்கிறது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் விஜயபாலன், மூர்த்தி உள்ளிட்டோர் திமுகவில் சேர்ந்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பலரும் திமுகவில் இணைந்ததையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் தற்போது திமுகவில் சேர்ந்துள்ளார். சேர்ந்த பின்னர் அளித்த பேட்டியில், 4 ஆண்டு கால அதிமுக ஆட்சியை ஆதரித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதிமுக என்கிற கட்சி தற்போது ஒரு கம்பெனியாகி விட்டது என்றெல்லாம் கூறியுள்ளார். மேல் மட்டத் தலைவர்கள் தொடங்கி அடிமட்டத் தொண்டர்கள் தொடர்ந்து வெளியேறி வருவது, கட்சி பலவீனப்பட்டு வருவதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். ஒன்றுபட்ட அதிமுகவை டெல்லி மேலிடம் எதிர்பார்க்கிறது. ஆனால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளில் 4 பிரிவுகளாக சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் எடுத்த உறுதிமொழியில் தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை சொல்லி விட்டனர். சொல்ல வாய்ப்பில்லாத தொண்டர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்றுபடாத தலைவர்களால், அதிமுக கரைந்து கொண்டிருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார்கள் மூத்த தலைவர்கள். பழைய அதிமுகவாக கட்சி மீளுமா… பொருத்திருந்து பார்க்கலாம்