சென்னை: தமிழகத்தில் சொத்து வரி, மின்கட்டண உயர்வை தொடர்ந்து போக்குவரத்து சேவைகளுக்கான பல்வேறு கட்டணங்களை 10 மடங்கு வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என தகவல் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்த்தப்படுவதாக சமீபத்தில் திமுக அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் பொதுமக்களை பாதிக்காத வகையில் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என திமுக அரசு கூறியது.
அதோடு மட்டுமின்றி மத்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் தான் இந்த கட்டண உயர்வை அறிவிக்க வேண்டிய சூழலுக்கு மாநில அரசு தள்ளப்பட்டு இருப்பதாக அமைச்சர்கள் தொடர்ந்து விளக்கம் அளித்தனர். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் பல்வேறு போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த மாநில அரசு முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவானது கடந்த ஜூலை 25-ந்தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் முடிந்ததும் புதிய கட்டணங்களை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம், இந்த மையத்தின் அங்கீகாரத்தை புதுப்பித்தல், இந்த மையத்தை புதுப்பிப்பதற்கான தாமத கட்டணம், போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு கட்டணம், சிஎப்எக்ஸ் (CFX) நோட்டீஸ் திரும்பப் பெறுதல், தற்காலிகப் பதிவு மற்றும் ற்காலிகப் பதிவின் காலத்தை நீட்டிப்பு செய்தல், பிற மண்டல வாகனங்களின் பிட்னஸ்(தகுதி) சான்று அனுமதிக்கான கட்டணம், ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் வெளியீடு, தகுதி சான்றுக்கான நகல் கட்டணம், மோட்டார் வாகன ஆய்வாளரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு கட்டணம் உள்ளிட்ட 10 சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த கட்டணங்கள் 10 மடங்கு வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் ரூ.1000ல் இருந்து ரூ.5 ஆயிரம், இந்த மையத்தின் அங்கீகாரத்தை புதுப்பித்தலுக்கான கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.3 ஆயிரம், இந்த மையத்தை புதுப்பிப்பதற்கான தாமத கட்டணம் மாதத்துக்கு ரூ.100 என்ற அளவில் இருந்த நிலையில் இனி மாதம் ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட உள்ளது. போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.500, சிஎப்எக்ஸ் (CFX) நோட்டீஸ் திரும்பப் பெறும் கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.500 என உயர்த்தப்பட உள்ளது.
இதுதவிர தற்காலிக பதிவு மற்றும் தற்காலிகப் பதிவின் காலத்தை நீட்டிப்பு செய்தலுக்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.200 ஆகவும், பிற மண்டல வாகனங்களின் பிட்னஸ்(தகுதி) சான்று அனுமதிக்கு கட்டணம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட உள்ளது. ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.75ல் இருந்து ரூ.400 ஆகவும், தகுதிசான்று நகல் பெற கட்டணம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளரின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு கட்டணம் ரூ.40ல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் நிதி நெருக்கடியை அரசு எதிர்கொண்டுள்ளது. இதனை சமாளிக்கும் நோக்கில் தான் போக்குவரத்து துறை சேவைகளுக்கான கட்டணம் உயர்தத அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த சேவைகளுக்கான கட்டணம் 2006-2007 காலக்கட்டத்தில் திருத்தத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட உள்ளது. இருப்பினும் மோட்டார் வாகன வரி, எல்எல்ஆர், ஓட்டுனர் உரிமத்துக்கான கட்டணம் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயமாகும்.